Published : 09,Mar 2023 06:07 PM
மாற்றம்.. முன்னேற்றம்.. விமான பணிப்பெண்களுக்காக ஆகாசா ஏர் நிறுவனத்தின் அசத்தல் நடவடிக்கை!

உலகில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் உரிமைகளை காக்கும் பொருட்டு பல்வேறு புரட்சிகரமான, தைரியமான போராட்டங்களுக்கு பிறகு பெற்ற ஒரு அங்கீகாரம்தான் மகளிர் தினம். இது ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பங்கு இல்லாத துறையை கைவிட்டு எண்ணும் அளவுக்கு இருந்தாலும், அடிப்படை உரிமைகள் அனைத்தும் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருக்கும் பெண்களுக்கு சென்று சேர்ந்து விட்டதாக என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே இருக்கும்.
ஏனெனில் இன்றளவும் பெண்களை ஒடுக்கவும், அவர்களை வெறும் அலங்கார பொருளாகவும் பாவிக்கும் மனப்பான்மை மக்கள் மனதில் விட்டு அகலவில்லை என்றே கூறலாம். படித்து முன்னேறி பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் பெண்கள் இப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என்ற இலக்குகளுடனேயே பலரும் பயணிக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சுட்டிக்காட்டும் சொற்களை கேட்கக் கூடிய பணிகளில் ஒன்றாகவே இருக்கிறது விமான பணிப்பெண்கள் வேலை. விமான பணிப்பெண்கள் என்றாலே பரவலாக எல்லாரும் கூறுவது ஹீல்ஸ், ஷார்ட்ஸ், மேக்கப் என எல்லா அலங்காரங்களையும் செய்துக்கொண்டு பதுமை போல வந்து பயணிகளுக்கு பணிவிடைகளை செய்வதாகவே இருக்கும்.
ஆனால் பிடித்த வேலையாக, பயிற்சி பெற்று தேர்ந்தவர்களாக இருந்தாலும் சில சமயங்களில் ஹீல்ஸ் அணிந்தபடி நடு வானில் விமானத்தில் செல்வது அந்த பணிப்பெண்களுக்கே அசவுகரியங்களை கொடுக்கும். இப்படியான சூழ்நிலைகளை தவிர்க்க எளிமையான சீருடைகளை கொடுக்கும்படி பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், இந்தியாவின் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண்களுக்கு வழக்கமான சீருடைக்கு பதிலாக மிகவும் எளிமையான, வசதியான சீருடையை அணியும்படி அதனை மாற்றி அமைத்து விமானத்துறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தத்தையே கொண்டு வந்திருக்கிறது.
#AkasaCrewLook | Comfortable, Eco-Friendly & Fun.
— Akasa Air (@AkasaAir) July 4, 2022
Presenting the all-new Akasa Air crew uniforms designed to keep our organisation’s core value of putting the comfort of our employees and the environment first. Read More: https://t.co/aAmFbywJIapic.twitter.com/T9jmztMNb7
இது குறித்து திஷ்கா மிஷ்ரா என்ற பெண் ஒருவர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையவாசிகளிடையே பெருமளவில் வைரலாகியிருக்கிறது. அதில், “அண்மையில் ஆகாசா ஏர் விமானத்தில் பயணித்தேன். அப்போது நான் பார்த்த மாற்றம் ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர கொடுத்தது, அதாவது, பணிப்பெண் ஒருவர் வழக்கமான ஸ்கர்ட், ஷார்ட்ஸ், ஹீல்ஸ் அணியவில்லை.
இதனைக் கண்ட பலரும் ஆகாசா ஏர் நிறுவனத்தின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்கள். சமூகத்தின் கற்பிதங்களை அந்த சமூகமே உடைத்தால் மட்டுமே ஒன்றுபட்ட முன்னேற்றமும் கிடைக்கும் என்பதற்கு இந்த ஒரு முயற்சியே சாட்சி என்றும் கருத்துகள் கூறப்பட்டிருக்கிறது.