Published : 09,Mar 2023 01:22 PM

‘அங்கு மனு தள்ளுபடியானால், மீண்டும் இங்கு தாக்கல் செய்வதா?’- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Penalty-for-those-who-file-a-petition-which-has-been-dismissed-by-the-High-Court
நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்ததாக ஹிமாச்சல் ஆப்பிள் பழச்சாறு முன்னாள் விற்பனையாளரின் வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஹிமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் சார்பில், தஞ்சாவூரில் ஹிமாச்சல் ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் விற்பனையாளராக ஜெஸ்ஸி ஃப்ளாரண்ஸ் என்பவரை ஒப்பந்த அடிப்படையில் ஹிமாச்சல தோட்டக்கலை நிறுவனம் நியமித்து இருந்தது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 2013ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி ஜெஸ்ஸியுடனான  ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக,  ஹிமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது.
image
இந்த உத்தரவை எதிர்த்து ஜெஸ்ஸி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களில், அதே கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் ஜெஸ்ஸி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தள்ளுபடியானதை மறைத்து, அதே கோரிக்கையுடன் சென்னையில் வழக்கு தொடர்ந்திருப்பதை ஏற்க முடியாது. நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்” என்று கூறி ஜெஸ்ஸி ஃப்ளாரன்ஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த அபராதத் தொகையை 2 வாரங்களுக்குள் உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும், அதுகுறித்து மார்ச் 23ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்