Published : 09,Mar 2023 09:41 AM
கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்துக்கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி, பாதுகாப்பு கேட்டு மகளிர் தினத்தில் காவல் நிலையத்தில் கணவருடன் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி கிராமத்தை சேர்தவர் சின்னகண்ணன். இவரது மகன் தேவேந்திரன். ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இதே கிராமத்தை சேர்த்த வெங்கடசலபதி என்பவரது மகள் கனிமொழி. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கணிமொழி படிப்பினை முடித்துவிட்டு சொந்த ஊரான ஆலப்பட்டிக்கு வந்துள்ளார்.
இவர்களின் காதல் கனிமொழியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கலக்கமடைந்த கனிமொழியும், தேவேந்திரனும் வீட்டைவிட்டு வெளியேறி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். பின்னர் காதல் மனைவி கனிமொழியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் தேவேந்திரன்.
இந்த நிலையில் கணிமொழியின் குடும்பத்தினர் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு உயிர் ஆபத்து இருப்பதாக கூறி, கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மகளிர் தினமான நேற்று தஞ்சமடைந்தனர். இது குறித்து கனிமொழி கூறுகையில், “நாங்கள் இருவரும் உறவுமுறையானவர்கள்தான். காதலை தொடர்ந்து, இப்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டில் வசிக்கிறேன். எங்களுக்கு என்னுடைய பெற்றோர்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் எனக்கும் என் கணவருக்கும் காவல்துறையினர் உரிய பாதுகப்பு தரவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.