
சட்டப்பேரவை தேர்தலின்போது, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரிடம் பறிமுதல் செய்யப்படட ரூ.9 லட்சத்தை காசோலையாக பெற உச்சநீதிமன்றத்தை அணுகும்படி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சரத்குமாரிடமிருந்து ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த தொகைக்கான கணக்குகளை சரத்குமார் ஒப்படைத்ததையடுத்து, ஏப்ரல் மாதம் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி தொகுதி தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அந்தப் பணம், திருச்செந்தூர் சார் கருவூலத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து பணத்தை பெற சென்றபோது, பறிமுதல் செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகளை கொடுத்துள்ளனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதால், அதற்கு பதில் காசோலையாகவோ, வரைவோலையாகவோ வழங்க தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சரத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, பணமதிப்பிழப்பு தொடர்பான எந்த வழக்குகளையும் பிற நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சரத்குமார் உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.