Published : 08,Mar 2023 03:27 PM
உலக மகளிர் தினம்: நாடுகளை கடந்து சேவையாற்றும் தாயுள்ளம்.. சமூக செயற்பாட்டாளர் ஜாஸ்மின்!

ஆண்டுதோறும் மார்ச் 8ம் நாளன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. எத்தனை எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகே இந்த பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆண்டுக்கு ஒரு நாள் மகளிர் தினத்தை வைத்து கொண்டாடி தீர்த்து விட்டால் பெண்களின் வாழ்வில் ஏற்றம் பெற்றுவிடுமா என்றால் அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்பதையே கள யதார்த்தம் உணர்த்தும் செய்தியாக இருக்கிறது.
ஏனெனில், பெண்களுக்கென எதும் பிரச்னை என வந்தால் அதனை ”பொண்ணுதான உனக்கென்ன” என கடந்து செல்பவர்களே அநேகமாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஜாஸ்மின் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவர் பிறந்தது மதுரை என்றாலும் உலகம் முழுக்க ஆதரற்று இருக்கும் பலருக்கும் ஓடோடி தொண்டு செய்யும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவருடைய செயற்பாடுகள் ஒவ்வொரு மனிதனுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கின்றது.
தற்பொழுது ஷார்ஜாவில் இருக்கும் ஜாஸ்மின் க்ரீன் க்ளோப் என்ற அமைப்பை கடந்த 17 வருடமாக நடத்தி வருகிறார். இவரால் பயனடைந்தவர்கள், இந்தியா, இலங்கை ஷார்ஜா, பாக்கிஸ்தான் என்று, பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவர்களது அமைப்பானது, உதவி தேவை படுபவர்களுக்கு, நேரடியாக சென்று, உதவிகளை வழங்கி வருகிறது.
இவரது தொண்டுகளில் சில:
ஷார்ஜாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு உணவு, உடை தருவதுடன், வயதான முதியவருக்கு, குழந்தைகளுக்கு என்று அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்து வருகிறார். மதுரையில் தனியார் பள்ளி ஒன்றிற்கு நூலகம் ஒன்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
HIV பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மற்றும், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டசத்து, மருந்துவகைகள், தவிர அவர்கள் படிப்பதற்கு உதவியும் செய்து வருகிறார். கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்தியாவிலிருந்து இங்கு வந்து ஏமாற்றபட்ட பெண்கள் மற்றும் இளைஞர்களை அவர்களின் சொந்த ஊர் செல்ல இந்திய எம்பஸிடம் பேசி அவர்களை ஊர் செல்ல உதவியும் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிலிண்டர் சப்ளையும் செய்து இருக்கிறார்.
இலங்கையில் தண்ணீர் உபயோகத்திற்காக குடியிருப்பு வாசிகளுக்கு கிணறு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.
இவ்வாறு தேவைப்படும் நேரத்தில் தேவைப்படுபவர்களுக்கு பல...பல... உதவிகளை சத்தமில்லாமல் செய்து வரும் ஜாஸ்மின்னுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்.
ஜெயஸ்ரீ அனந்த்