Published : 08,Mar 2023 12:44 PM
புற்றுநோயாளிகளுக்கு தெம்பூட்டும் நம்பிக்கை நாயகி அபர்ணாகிரி! #WomensDaySpecial

இன்று பெண்கள் பல துறைகளில் சாதித்து வந்தாலும், இன்றளவும் பெண்களுக்கு அன்றாட வாழ்வில் பல்வேறு சவால்கள் பெரியளவில் உள்ளன என்பதை நம்மால் மறுக்கமுடியாது. அவற்றை உடைத்தெரிந்து, தங்கள் துறையில் தங்களுக்கென்ற ஒரு இடத்தை அடைவது என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைவதில்லை. அதிலும்கூட, மக்கள் சேவையில் இருக்கும் பெண்களின் வாழ்வு கூடுதல் சவால் நிறைந்தவையென்றே சொல்லலாம். அப்படியான ஒருவர்தான் அபர்ணா கிரி என்ற பெண். சமூக சேவகியான இவர், தன் வாழ்நாளின் பெரும்பகுதியினை புற்றுநோயாளிகளின் நலனுக்காக செலவிட்டு வருகிறார்.
யார் இவர்? புற்றுநோயாளிகளுக்காக இவர் ஆற்றி வரும் சேவைதான் என்ன? மகளிர் தினமான இன்று, அதை அறிந்துகொள்வோம்!
அபர்ணா கிரி, சென்னையை சேர்ந்தவர். தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் இவர், புற்றுநோயால் தன் கணவரை இழந்திருக்கிறார். அந்த நிகழ்வுக்குப்பின்தான் புற்றுநோயாளிகளுக்கென்ற தன் சேவையை தொடங்கியிருக்கிறார் அபர்ணா.
அந்தவகையில் இவர் மக்களிடத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், கீமோதெரப்பிக்குப்பின் புற்றுநோயாளிக்குத் தேவைப்படும் Wig (செயற்கை தலைமுடி) தயாரிக்க பார்லர்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று தலைமுடியை சேகரித்து வருகிறார். இதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் இவர்.
அத்துடன் புற்றுநோயாளிக்கான மருந்துகள் மற்றும் உணவுகளை தன்னால் இயன்றவரை இலவசமாக பெற்று தருகிறார் அபர்ணா. உடன், வாட்ஸ் அப்பில் ‘ரத்த வங்கி குழு’வை ஏற்படுத்தி ரத்தம் தேவைப்படுபவருக்கு உடனடியாக தானம் கிடைக்கவும் உதவி வருகிறார். வாரத்தின் இறுதி நாட்களில் சாலைகளில் உடை உணவின்றி தவிக்கும் வயதான ஏழை எளியவருக்கு உணவு , உடை அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறார்.
புற்றுநோயாளிகளை பொறுத்தவரை, நோயின் தாக்கத்தாலும் சிகிச்சைகளின் பக்கவிளைவுகளாலும் அவர்கள் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பெரும் போராட்டத்தை கடந்துவருவர். அப்படியானவர்களுக்கு மனதளவில் நம்பிக்கை விதைக்கும் வகையில் செயலாற்றி வருகிறார் அபர்ணாகிரி.
- ஜெயஸ்ரீ அனந்த்