Published : 07,Mar 2023 04:31 PM

"ஓட்டு போட்டவர்களை அடிமைகள் போல நடத்துகின்றனர்"- திமுக-வை சாடிய வானதி சீனிவாசன்

Vanathi-Srinivasan-slams-DMK-Govt-and-its-minsiters

“வடமாநிலத்தவருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டுவிட்டு, பிரச்னை வந்த பின்னர் ‘ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது’ என்று சொன்னால் எப்படி? இதை உருவாக்கியதே நீங்கள் தான்... இதை சரி செய்ய வேண்டியதும் நீங்கள்தான்” என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதில் பதிலளித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர் நடராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கூட்டத்தை குறித்து பேசுகையில், “இந்தக் குழுவில் மக்கள் பிரச்சினையை பேச போதுமான நேரம் இல்லை. அதிகாரிகள் போதுமான தகவலோடு வரவில்லை. இதை சேர்மேனிடம் சொல்லி இருக்கின்றோம். இந்த மீட்டிங் அடிக்கடி நடத்தபட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

image

பின் தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து பேசத்தொடங்கினார். அவர் பேசுகையில், “வடமாநில தொழிலாளர் விவகாரம் ஜனவரியில் இருந்து நடக்கின்றது. இதில் இதுநாள்வரை மாநில அரசோ, முதல்வரோ கருத்து தெரிவிக்காமல் இருந்துவிட்டு, இப்போது இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்த பின்னர் நடவடிக்கை எடுக்கின்றனர். இப்போது ஹோலி பண்டிகைக்காகத்தான் நிறைய பேர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அதேநேரம், இதுபோன்ற வீடியோ பரவியதாலும் வீட்டிற்கு திரும்பி வர சொல்லி குடும்பத்தினர் பேசிஉள்ளனர். அதனாலும் தொழிலாளர்கள் ஊருக்கு செல்கின்றனர்.

இப்போதுதான், முதல்வர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆனால் அமைச்சர்களே இதுபோன்று பேசுகின்றனர். வடமாநிலத்தவர் தொடர்பான பிரச்சினையில் முதல்வர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிகளவு இருக்கின்றனர். இப்போது இந்த பிரச்னையால் டெக்ஸ்டைல் துறையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த பிரச்சனையை சரியாக கையாளததுதான்.

இந்தப் பகுதியை (கோவையை) மாநில அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்துவதை போல, ‘வடமாநில தொழிலாளர் பிரச்னையாலும் மாநிலம் பாதிக்கட்டும்’ என்ற தமிழக அரசு இருக்கின்றதா என்று சந்தேகம் இருக்கிறது. முதலமைச்சருக்கு ஆட்சிக்கு ஆபத்து என்ற உணர்வு ஏற்பட்டால் அதற்கு மூல காரணம் யார்? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. தமிழக அமைச்சர்களே பானிபூரி விற்பனை குறித்தும், இந்தி பேசும் தொழிலாளர்கள் குறித்தும் விமர்சனங்கள் வைக்கின்றனர். சிலர் இதற்கு வலுவான கருத்துக்களை சேர்த்து பரப்புகின்றனர். வெறுப்புணர்வு பிரசாரத்தை தூண்டுபவர்களை விட்டு விட்டு, பிரச்னை வந்த பின்னர் ‘ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது’ என்று சொன்னால் எப்படி? இதை உருவாக்கியதே நீங்கள் தான். இதை சரி செய்ய வேண்டியதும் முதல்வர்தான். அடுத்தவர் மீது பழிபோடும் முயற்சியை முதல்வர் செய்யக்கூடாது.

இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் முயற்சி செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத்தில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள் தான். அவர்கள் குறித்து அமைச்சர்கள் பேசுவதை, வேடிக்கை பார்க்காமல் இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை அரசு காட்ட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பாஜக-விலிருந்து கடந்த சில தினங்களாக பலரும் விலகிவருவது குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கட்சியிலிருந்தும் மாற்றுக் கட்சிக்கு செல்வதும், மாற்றுக் கட்சியில் இருந்து இங்கு வருவதும் வழக்கம்தான். பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு வெளியே போய் இருக்கின்றனர். அவருக்கு சில அரசியல் காரணம் இருக்கலாம். வெளியில் செல்லும்பொழுது அவர்களின் கருத்துக்களை சொல்வார்கள். இந்த விவகாரத்தை பொருத்தவரை, பாஜகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாஜக புதிய நபர்களால் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நபர்களின் விலகலால் பா.ஜ.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவித்தார்.

image

கல்வி வளர்ச்சி குறித்து பேசுகையில், “தமிழக மாணவர்கள் தேர்ச்சியில் குறைவு என சொல்வதற்கு பிரதமரிடம் எதற்கு செல்ல வேண்டும்? மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை கேட்பது சரியானது கிடையாது. மாணவர்களை போட்டித்தேர்வுக்கு தயார்படுத்தி அவர்களுக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும். மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த வேண்டும்” என்றார்.

சிராஜ் பஸ்வான் பா.ஜ.கவின் பி டீம் என திமுக தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, “ஒருவர் தேசிய அரசியலுக்கு போகும்பொழுது, பல பிரச்னைகளை சந்திக்க வேண்டும். தேசிய தலைவர்களுடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளவேண்டும். தேசியத்தின் மீதான நம்பிக்கை முதலில் உங்களுக்கு இருக்கின்றதா? திமுக அமைச்சர்கள் ஓட்டு போட்டவர்களை இழிவாக பேசுகின்றனர். இவர்கள் எஜமானர்கள் போலவும், ஓட்டு போட்டவர்களை அடிமைகள் போலவும் நடத்துகின்றனர். ஓட்டு போடும் மக்களின் சுயமரியாதையை நினைத்துப்பார்த்துவிட்டு அமைச்சர்கள் பேச வேண்டும். இதற்கு சரியான பதிலை மக்கள் சொல்லுவார்கள்” என்றார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்