Published : 06,Mar 2023 10:04 PM
இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரியின் பயிற்சிக் களத்தைப் பகிர்ந்த ராணுவம்

சியாச்சினில் இந்திய ராணுவப் படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற கேப்டன் ஷிவா சவுகான், பயிற்சி பெற்ற வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
உலகின் மிக உயரமான போர்க்களமான, பனிபடர்ந்த சியாச்சினில் இந்திய ராணுவப் படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர், கேப்டன் ஷிவா சவுகான்.
சியாச்சினில் சுமார் 15,600 அடி உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட்டில், மூன்று மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி ராணுவ அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் பணியமர்த்தப்பட்டார். கேப்டன் சவுகான், பல்வேறு போர் பொறியியல் பணிகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள சப்பர்ஸ் குழுவை வழிநடத்துவார் என்று ராணுவம் தெரிவித்திருந்தது.
#WATCH | Captain Shiva Chauhan of the Indian Army is the first female officer to have been deployed on the world’s highest battlefield Siachen glacier.
— ANI (@ANI) March 6, 2023
(Video: Indian Army) pic.twitter.com/WWEdq4O0RY
இந்த நிலையில் கேப்டன் ஷிவா சவுகான், சியாச்சின் போர்ப் பள்ளியில், ராணுவத்தினருடன் இணைந்து 3 மாதங்களில் கடுமையான தீவிர பயிற்சிகளைப் பெற்றார். அப்போது அவர், சகிப்புத்தன்மை, பனிச்சுவர் ஏறுதல், பனிச்சரிவு மற்றும் சிதைவு மீட்பு மற்றும் உயிர்வாழும் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டார் என ராணுவம் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் கேப்டன் ஷிவா சவுகான் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை இந்திய ராணுவம் தற்போது பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.