Published : 06,Mar 2023 08:08 PM
”ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை..” - சார்பட்ட-2இல் பா.ரஞ்சித் - சந்தோஷ் கூட்டணி சாத்தியமா?

கொரோனா ஊரடங்கின் போது ஆன்லைன் தளங்களில் நேரடியாக வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம்.
பசுபதி, காளி வெங்கட், துஷாரா விஜயன், கலையரசன், ஜான் கொக்கேன் என பலரும் நடித்திருந்த சார்பட்டா கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இந்தியாவில் எமெர்ஜென்சி காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் குத்துச் சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான கதைக்களமாக இருக்கும் சார்பட்டா படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசை அமைத்திருந்தார்.
படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக அதன் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா இரண்டாம் பாகம் வெளியாகப் போகிறது என நடிகர் ஆர்யா போஸ்டரை பகிர்ந்து “Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட Round
#Sarpatta2 விரைவில்” என ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயிருக்கிறார்கள்.
ஏனெனில் பாட்ஷா, மங்காத்தா, துப்பாக்கி, தனி ஒருவன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை என தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களின் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக கோலிவுட் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என ஆர்யாவும், நீலம் புரொடக்ஷன்ஸும் அறிவித்திருப்பது சற்று ஆச்சருஅ, அடையச் செய்திருக்கிறது.
Kabilan returns For honour and glory#Sarpatta2 Coming soon @arya_offl@officialneelam#TheShowPeople@NaadSstudios#JatinSethi@kabilanchelliah@pro_guna@gobeatroutepic.twitter.com/W7XNVkW6Vj
— pa.ranjith (@beemji) March 6, 2023
இதுபோக சார்பட்டா படத்தின் கிளைமேக்சே திருப்திகரமாக இருக்கும் நிலையில் இதில் சீக்வலாக அடுத்து எந்த மாதிரி எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் இதனூடே எழந்துள்ளது. வேம்புலியை கபிலன் குத்துச் சண்டையில் வீழ்த்துவதுடன் படம் முடிந்துவிடும்.
இதுஒருபுறம் இருக்க பா.ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த சந்தோஷ் நாராயணன்தான் சார்பட்டா 2-க்கும் இசையமைக்கப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனெனில் சர்பட்டா பரம்பரை படத்தில் அடிநாதமாக திரைக்கதையும், இசையமைப்பும் தான் இருக்கும். பின்னணி இசையின் பங்கு அளப்பரியதாக இருந்தது.
Want PaRanjith & Sana Combo back for this one..
— Laxmi Kanth (@iammoviebuff007) March 6, 2023
கடைசியாக இருவரும் இணைந்து பணியாற்றியதும் சார்பட்டாதான். அதற்கு பின் வந்த நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் சரி, தற்போது பா.ரஞ்சித் இயக்கிக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திலும் சரி சந்தோஷ் நாராயணன் இடம்பெறவில்லை.
இப்படி இருக்கையில் திடீரென சார்பட்டா 2 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் துளிர் விட்டிருக்கிறது. ஏனெனில் சார்பட்டா படத்தின் வெற்றிக்கு மற்ற காரணிகள் எந்த அளவுக்கு முக்கியமாக இருந்ததோ, அதே அளவுக்கான முக்கியத்துவம் பாடல்கள், பின்னணி இசை என அனைத்துக்கும் இருந்தது. இதற்கு ஆணிவேராக செயல்பட்டது சந்தோஷ் நாராயணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.