Published : 06,Mar 2023 09:39 AM

பறவைகள் மீதான காதல்: 288 வகையான பறவைகளை அடையாளம் காணும் 11 வயது சிறுமி

Love-of-birds-11-year-old-girl-who-has-identified-288-species-of-birds

பறவைகள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தற்போது வரை 288 பறவைகளை அடையாளம் கண்டுள்ள 11 வயது சிறுமி பறவைகளின் தகவல்கள் அடங்கிய '"THE BIRDS OF MASINAGUDI" என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த ஓராண்டாக வசித்து வருபவர் விஸ்வேஸ். இவர், மும்பையில் ஐடி துறையில் பணியாற்றி வந்த நிலையில், இவரது மனைவி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். இவர்களுக்கு அனன்யா (11) என்ற மகள் உள்ளார். இவர்கள் மூவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை மும்பையில் வசித்து வந்தனர்.

image

இந்நிலையில், அனன்யாவிற்கு 9 வயது இருக்கும் போது பறவைகள் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து தான் பார்க்கக் கூடிய பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அந்த பறவைகளின் தகவல்களை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டியிருக்கிறார். இதுகுறித்து தன் தந்தையிடம் சிறுமி கூறிய நிலையில், அவரும் தன் குழந்தையின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

இதையடுது;து பறவைகள் குறித்து கூடுதலாக தெரிந்து கொள்வதற்காக மும்பையில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தனது ஐடி பணியை விட்டுவிட்டு விஸ்வேஸ் குடும்பத்துடன் ஊட்டிக்கு வந்து குடியேறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து மகளை வழிநடத்த சரியான நபரை தேடியபோது, மசினகுடி பகுதியைச் சேர்ந்த ஆபித் என்பவரது நட்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து ஆபித் மசினகுடி பகுதியில் பறவைகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவராக உள்ளவர். தனது மகளின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக விஸ்வேஸ் மசினகுடி பகுதியில் தனது குடும்பத்துடன் குடியேறினார்.

image

சிறுமி அனன்யாவிற்கு பறவைகள் மீது இருந்த ஆர்வத்தை கண்டு வியந்த ஆபித், தான் செல்லும் இடமெல்லாம் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். கடந்த ஓராண்டாக சிறுமி அனன்யாவும் மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று அங்கு வாழக்கூடிய பறவைகளை தெரிந்து கொண்டதோடு, அது குறித்த தகவல்களையும் சேகரிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், அனன்யா கடந்த ஓராண்டு தேடுதலின் பலனாக இதுவரை 288 வகையான பறவைகளை கண்டறிந்துள்ளார். தான் கண்டறிந்த பறவைகளின் பெயர்களையும் அது குறித்த தகவல்களையும் அவர் கூறும் போது கேட்கும் நமக்கு இவரின் ஆர்வத்தின் மீது ஆச்சரியம் ஏற்படுகிறது. தான் கண்டறிந்த பறவைகள் குறித்து மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பறவைகள் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் வெளியிடுவதற்கு அவர் முயற்சி மேற்கொண்டார்.

image

அதன் பலனாக தற்போது தான் கண்டறிந்த 100 பறவைகளின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய " THE BIRDS OF MASINAGUDI" என்ற புத்தகத்தையும் உருவாக்கி இருக்கிறார். விரைவில் இந்த புத்தகத்தை பொதுமக்கள் மத்தியில் வெளியிட உள்ளதாகவும் சிறுமி கூறினார்.

கோவிட் பொது முடக்கத்தின் போது, ஆன்லைன் வழியாக அமெரிக்காவில் " JUNIOR MASTERS IN HERPETOLOGY " என்ற பயிற்சியை கற்று முடித்திருக்கிறார். இது பாம்புகள் மற்றும் முதலைகளை பிடிப்பதற்கும், கையாள்வதற்கும் தரப்படும் பயிற்சியாகும். இந்த பயிற்சியை முடித்த அனன்யா, இதுவரை மசினகுடி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த 30-க்கும் மேற்பட்ட பாம்புகளை பத்திரமாக மீட்டு அடர் வனப்பகுதிக்குள் விட்டிருக்கிறார்.

image

எதிர்காலத்தில் வன அதிகாரியாக வரவேண்டும் என மகள் ஆசைப்படுவதாகவும் அதற்கான முயற்சிகளை தற்போது அவர் துவங்கி இருப்பதாகவும் தந்தை விஸ்வேஸ் பெருமையுடன் கூறினார். சிறுமி அனன்யாவின் பறவைகள் மீதான ஆர்வமும், அது குறித்த தேடல்களையும் இப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரும் உள்ளூர் மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். அதே நேரம் மகளின் ஆசையை புரிந்து கொண்டு அதை சாத்தியப்படுத்துவதற்காக, தனது ஐடி பணியை துறந்த தந்தையின் பாசத்தையும் கண்டு வியந்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்