Published : 05,Mar 2023 10:57 PM

பேராபத்து! அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவு பனி உருகுவது அதிகரிப்பு

Scientists-worried-as-Antarctic-sea-ice-hits-lowest-levels-ever-recorded

அண்டார்டிகாவில் கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது.

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மிக வேகமாக கரைந்து வருகிறது. இதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 'தி கார்டியன்' பத்திரிகையில் அண்மையில் வெளியான தகவலின்படி, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்டார்டிகா கண்டத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வரை கணக்கிடப்பட்ட ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 வருடங்களில் மூன்றாவது முறையாக அண்டார்டிகாவின் கடல் பனி அளவு  குறைந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

image

25 பிப்ரவரி 2022 வரையிலான கணக்கெடுப்பில் அண்டார்டிகா கடல் பனி அளவு 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. ஆனால், இந்த வருடம், அண்டார்டிகா கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது. 

1979ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் தற்போது அண்டார்டிக் பனிப் படுகையில் பனி உருகுவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  இந்த அளவு பனி உருகுகிறது என்றால் கடல் மட்டம் அந்த அளவு உயரும். ஆகவே நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.