Published : 05,Mar 2023 07:59 PM
தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடியின் சடலங்கள் மீட்பு - மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடியில் காதல் ஜோடி இருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவரும் கோட்டூர் அருகே காடன் சேத்திபகுதியைச் சேர்ந்த நிஷா (16) இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், அவர்களது குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் பாரதிராஜா மற்றும் நிஷா ஆகிய இருவரும் விரக்தியடைந்த நிலையில் இருந்தனர். இந்த நிலையில், மன்னார்குடி அருகே உள்ள பருத்திக்கோட்ட்டை கிராமத்தில் வயக்காட்டில் உள்ள மரத்தடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதனை கண்ட அப்பகுதியினர் உடனடியாக வடுவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இருவரது சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் வீட்டார் தரப்பில் தங்களுடைய மகள் காணவில்லை என்று தெரிந்த போது உடனே பருத்திக்கோட்டை கிராமத்திற்கு சென்று காதலித்து வந்த பாரதிராஜாவின் வீட்டில் கேட்டுள்ளனர். அப்போது தங்களுக்கு ஒன்றும் தெரியாது என பாரதிராஜா வீட்டைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடிகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் நடைபெற்றனரா என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.