Published : 05,Mar 2023 12:07 PM
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல காரணம் திமுக தான்” என அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், “திமுக-வின் இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றால் வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு ஏற்படுகிறது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி வருகின்றனர்” என அவர் தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட அந்த அறிக்கையின்மீதே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமாநிலத்தவர் மீது வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 4, 2023
முதல்வர் ஸ்டாலின், வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பை காப்பார் என்று நம்புகிறேன்
- மாநில தலைவர் திரு.@annamalai_k#Annamalaipic.twitter.com/d2kIlb4lK0
இதே போல பீகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கு மீதும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும், ட்விட்டர் கணக்கை முடக்கவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக சைபர் கரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.