அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு

கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டியது செல்லும் என தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில் பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே முடிவெடுக்கும் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

இந்நிலையில், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கியும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று (மார்ச் 3) விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com