Published : 08,Feb 2017 04:24 PM

பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் நாளை சென்னை வருகை

Exciting-scenario-Governor-to-visit-Chennai-tomorrow

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு, அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே திடீரென சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடிப் பேட்டியளித்தார். மேலும் தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே சசிகலா தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் முதலமைச்சராவதற்கு 131 எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பதாக அதிமுக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்ததும் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தப்பட்டு, அனைவரும் சொகுசுப் பேருந்தில் ஒன்றாகப் பயணம் கிளம்பினர். அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எங்கு தங்கவைக்கப்பட்டனர் எனத் தெரியாத நிலை உள்ளது.

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் சசிகலாவுக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, குடியரசுத் தலைவரை அதிமுக எம்பிக்கள் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து ஆளுநர் நாளை பிற்பகல் சென்னை வருகிறார் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்