”தானம் கொடுத்தது நீயா மகளே!” - ரகசியமாக சிறுநீரக தானம் செய்த மகளால் நெகிழ்ந்துபோன தந்தை!

”தானம் கொடுத்தது நீயா மகளே!” - ரகசியமாக சிறுநீரக தானம் செய்த மகளால் நெகிழ்ந்துபோன தந்தை!
”தானம் கொடுத்தது நீயா மகளே!” - ரகசியமாக சிறுநீரக தானம் செய்த மகளால் நெகிழ்ந்துபோன தந்தை!

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தந்தைக்கு அவருக்கே தெரியாமல் ரகசியமாக சிறுநீரக தானம் செய்து, அவரை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியுள்ளார்.

உறுப்பு தானம் வழங்குவதில் பெண்கள் முன்னிலை

உலகளவில் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதில் பெண்களே முன்னிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும், தன்னுடைய நெருங்கிய சொந்தங்களுக்கு உடல் உறுப்புகளை வழங்குவதில் அதிகம் விருப்பம் கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கு சமீபகாலமாக எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், தன் தந்தைக்கு சிறுநீரகம் தானம் அளித்து அவரது வாழ்வை நீட்டித்துள்ளார்.

அமெரிக்காவில் தந்தைக்கு சிறுநீரக தானம் வழங்கிய மகள்

அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரைச் சேர்ந்தவர் ஜான். 60 வயதான இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து, அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதேநேரத்தில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக தன் குடும்பத்தில் உள்ளவர்கள், அவருக்கு சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தபோதும், அதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ரகசியமாக தானம் தந்த மகள்

”15 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயில் ஒரு மகனை இழந்துவிட்டேன். அதனால், தனக்கு யாரும் உறுப்பு தானம் செய்ய வேண்டாம். அவர்கள் அனைவரும் என்னுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என ஜான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் தன் தந்தை துயர்ப்படுவதை அறிந்த ஜானின் ஒரே மகளான டெலாய்னி, தன்னுடைய சிறுநீரகத்தை அவருக்கு தானமாக முன்வந்துள்ளார். இதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

”எக்காரணம் முன்னிட்டும் இந்த விஷயத்தைத் தன் தந்தையிடம் சொல்ல வேண்டாம் எனவும், அவர் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவருடைய மகிழ்ச்சிக்காகத் தான், தானம் செய்ததாகச் சொல்லவேண்டும். அனைத்தையும் அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு சொல்லிக் கொள்ளலாம்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.

தானம் வழங்கியவரை சந்தித்த தந்தை

இதையடுத்து, பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு யாரோ ஒரு பெண் அவருக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்திருப்பதாக ஜானிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அவர் ஏற்றுக் கொண்டார். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நலம் தேறிய பிறகு தனக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய பெண்ணை சந்திக்க அவர் விரும்பினார். அவர் முன் தன் மகள் இருப்பதைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்துபோனார். பின்னர், தனக்கு சிறுநீரக தானம் வழங்கிய சந்தோஷத்தில் அவர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தினார். பிறகு, மகளை ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வாழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

”உயிருள்ளவரை அவளுக்காக வாழுவேன்”!

தந்தைக்கு சிறுநீரக தானம் வழங்கியது குறித்து டெலாய்னி, “எனது தந்தை சிரமப்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான்,அவருக்கே தெரியாமல் மருத்துவர்களை அணுகி சிறுநீரக தானத்துக்கு தயாரானேன். என்னுடைய 25 வருட காலத்தில், எனக்காக அவர் எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு உதவுவதை நான் பாக்யமாகக் கருதுகிறேன். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்ததும் அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

தந்தையான ஜான், “எனது மகள் எனக்கு மறுபிறவி அளித்திருக்கிறாள். உயிருள்ளவரை அவளுக்காக வாழுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள் செய்த தானம்

அமெரிக்காவில் தந்தை ஜானுக்கு மகள் டெலாய்னி சிறுநீரக தானம் அளித்ததுபோல், இந்தியாவிலும் பலர் தன் தந்தைக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தானம் செய்து வருகின்றனர். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா, தன்னுடைய சிறுநீரகத்தைத் தானமாகத் தந்தார்.

அதுபோல், கடந்த ஆண்டு டெல்லியில் பெண் ஒருவர், தனது கணவருக்கு சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்றியிருந்தார். அதுபோல் கடந்த 2016ஆம் ஆண்டு சியாச்சின் பனிப்பொழிவில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவருக்கு உத்தரப்பிரதேசத்தசி சேர்ந்த நிதி பாண்டே என்பவர் சிறுநீரகத்தைத் தானமாக வழங்கியிருந்தார்.

சமீபத்தில்கூட கேரளாவில் 17 வயது சிறுமி தன் தந்தைக்கு கல்லீரலைத் தானமாக வழங்கி வரலாற்றில் இடம்பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com