Published : 01,Mar 2023 08:49 PM

”எங்களை கருணைக் கொலை செய்துடுங்க”-ஜிஎஸ்டி நெருக்கடியால் கொந்தளிக்கும் ஒசூர் தொழில்முனைவோர்

Commercial-tax-department-and-entrepreneurs-are-affected-by-the-GST-issue

ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில வணிகவரித் துறையினரின் கடுமையான நடவடிக்கையால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் 17 வது தொழில் நகரமாகும். இங்கு குண்டு ஊசி முதல் ஆகாய விமானம் வரை தயாரிக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. குறிப்பாக, அசோக் லேலண்ட், டிவிஎஸ் மோட்டார், டாட்டா குழுமத்தின் டைட்டான் உள்ளிட்ட பெரு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்குவதற்காக வேண்டியே சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இதுபோல ஓசூர் மாநகரில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மிகச்சிறு முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால், வேலை வாய்ப்புகள் உருவாகி ஏராளமானவர்கள் பயனடைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு அண்மையில் ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக, மாநில அரசின் வணிகவரித்துறையினரால் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டு வாழ்வு இழந்து தொழில் முடங்கும் அபாயம் தற்பொழுது தலை தூக்கி உள்ளதாக சிறு குறு நிறுவனங்களின் தொழில் முனைவோர் அதிர்ச்சியுடன் வேதனை தெரிவிக்கின்றனர்.

image

இது பற்றி தொழில் முனைவோர் தெரிவிக்கையில்,

1. மூர்த்தி:

”சமீப காலங்களில் மேற்கொள்ளப்படும் ஜிஎஸ்டி விதிமுறைகளை கண்டு நாங்கள் அச்சமடைந்துள்ளோம். 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது பற்றி போதிய புரிதல் இல்லாத காரணத்தால், காலதாமதத்துடன் வரி செலுத்தினோம். இதனை காரணம் காட்டி கடந்த ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான அபராத தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று சுமார் ஐந்து வருடங்களுக்கான காலதாமத அபராத கட்டணத்திற்கான வட்டியும் சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும் என கூறி அனுப்பப்பட்ட இது போன்ற நடவடிக்கையால் தற்பொழுது இன்னலுக்கு ஆளாகி இருக்கிறோம்.

இது போதாது என்று, இந்த அபராத தொகையுடன் கூடிய வட்டியையும் செலுத்துவதற்கு கால அவகாசமும் அளிக்காமல் ஜிஎஸ்டி மற்றும் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத அளவுக்கு முடங்கும் நிலை உள்ளது. எனவே இதற்கு உரிய கால அவகாசம் அல்லது தவணைகள் போன்ற சலுகைகள் வழங்கினால் மட்டுமே தொடர்ந்து தொழில் செய்ய முடியும்” என கூறுகிறார்.

2. சசிகுமார்:

”ஜிஎஸ்டி தொகைக்கான காலதாமதக கட்டணத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டு அடி விழுந்துள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி நடைமுறைகள் அறிமுகத்திற்கு முன்பு பத்தாண்டுகளுக்கு நடைமுறையில் இருந்த செயல்பாடுகளுக்கும் சேர்த்து நோட்டீஸ்கள் அனுப்புவது உடன், அரசு கால அவகாசம் அளிக்காமல் நெருக்கடி கொடுப்பது மேலும் ஒரு பேரிடியாக உள்ளது” எனத் தெரிவிக்கிறார்.

3. முகமது இஸ்மாயில்:

”ஜிஎஸ்டி அபராத தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் எதுவும் கொடுக்காத நிலையில் இது பற்றி முன்னறிவிப்பு ஏதும் கொடுக்கவில்லை. திடீரென இது போன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு எங்களுக்கு தெரியாமலேயே வங்கி கணக்குகள் மற்றும் ஜிஎஸ்டி கணக்குகளை முடக்கியுள்ளனர். இதனால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான தொகைகளை பெரு நிறுவனங்களில் இருந்து பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதனை எவ்வாறு சமாளிப்பது என்று எங்களுக்கு புரியவில்லை” என்றார்.

4. வெற்றி பிரபு:

”சிறு தொழிற்சாலை வைத்து பணியாற்றி வரும் வேளையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எனது கவனத்திற்கு தெரியாமலேயே எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கியிடம் கேட்டதற்கு வணிகவரித்துறை பரிந்துரை அளித்ததன்பேரில் நடவடிக்கை என தெரிவித்தனர். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள தங்களை போன்ற சிறு தொழில் முனைவோர் மத்திய மாநில அரசுகளால் தொழில் செய்ய இயலாத நிலைக்கு ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. அதை காட்டிலும் கருணை கொலை செய்து விடலாம்” என ஆதங்கத்தை கூறினார்.

மேலும், “எங்களை முழுமையாக அழித்து ஒழித்து விடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்த்து அரசு உங்களுக்கு அவகாசங்கள் வழங்க வேண்டும். கந்து வட்டி வசூல் செய்வதுபோல அரசாங்கமே செயல்பட்டால் இவர்களை யார் தண்டிப்பது” என்று கேள்வியும் எழுப்பினார்.

5. ஸ்ரீதர்:

தற்பொழுது இந்த ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கையால் ஓசூர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் முனைவோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தொகை கட்டவில்லை என்பதற்காக எனது ஜி எஸ் டி எண் கணக்கு முடக்கப்பட்டுள்ளது இப்படி நடவடிக்கை மேற்கொண்டால் நிலுவைத் தொகை எவ்வாறு வெளியில் இருந்து எங்களால் வசூல் செய்ய முடியும்? மேற்கொண்டு எவ்வாறு தொழில் செய்ய இயலும்? எனவே அரசு இதற்கு உரிய நல்ல தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

6. சுதாகர்:

”அண்மை நாட்களில் ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. வட்டி செலுத்தவில்லை என்றும் தாமதமாக அபராத தொகை செலுத்தியதாகவும் கூறி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வங்கி கணக்குகள் முடக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வட்டி செலுத்தவில்லை என்பதற்காக அபராதத்துடன் செலுத்துவதற்காக போதிய அவகாசம் இருந்தாலும் வங்கி கணக்குகளை முடக்குவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். இதனால் இ- வேபில் மற்றும் இ -இன்வாய்ஸ் தயாரிக்க முடியவில்லை. இதனால் மேற்கொண்டு தொழிலை வளர்க்க இயலாத சூழ்நிலை உள்ளதால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

7. வேல்முருகன், ஹோஸ்டிய சங்க தலைவர்

”ஜூலை 2017 ஜிஎஸ்டி சட்டம் வந்து அமலுக்கு வந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் இந்த சட்டத்தில் வந்து நிறைய குழப்படிகள் இருந்தது. அதாவது எவ்வளவு வரிவிகிதம்? என்னென்ன ஃபார்மாலிட்டி ஃபாலோ பண்ணவேண்டும்? எப்படி ரிட்டன் பைல் பண்ண வேண்டும்? சாப்ட்வேர்லயே நிறைய பிரச்சனைகள் என பல சிக்கல்கள் இருந்தது. அதனால் வந்த புதிதில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சரியான நேரத்திற்கு வந்து ரிட்டர்ன் பைல் பண்ண முடியவில்லை. 28% அதிகப்படியான வரியால், எங்களுக்கு வரவேண்டிய பேமென்ட் வராத காரணத்தினால் ஜிஎஸ்டி நேரத்திற்கு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டேட் ஜிஎஸ்டி அதிகாரிகள் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் சுமார் ஐந்து வருடங்கள் பிறகு வரி தாமதமாக செலுத்தியுள்ளதால், தாமத வரி கட்டணத்துக்கு 18 சதவீதம் வட்டியும் கூடவே அவர்களின் லைசன்ஸையும் கேன்சல் பண்ணிஇருக்கிறார்கள். அவங்களுக்கே தெரியாமல் அவங்களுடைய வங்கி கணக்கையும் நிறுத்தியுள்ளனர் ஜிஎஸ்டி அதிகாரிகள். தினந்தோரும் ஒவ்வொரு வங்கியிலும் வந்து வங்கி கணக்கை முடக்கி வருகிறார்கள். இது போன்ற கடுமையான ஒரு போக்கு கடந்த ஒரு மூன்று மாதங்களாக மேற்கொண்டு வருகின்றனர்” என்றனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்