Published : 01,Mar 2023 02:53 PM
குஹ்னிமெனின் சுழலில் 109 ரன்னில் சுருண்டது இந்தியா.. பேட்டிங்கிலும் கெத்து காட்டும் ஆஸி.

இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால், இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
கே.எல்.ராகுல் அவுட்.. சுப்மன்கில் இன்!
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர் கேஎல் ராகுல், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக சுப்மன்கில், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஏமாற்றம் அளித்த இந்திய பேட்ஸ்மேன்கள்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுக்மன் கில் சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுக்மன் கில் 21 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
சற்று நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 22 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அஸ்வின் 3 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும், முகமது சிராஜ் (0) ரன் எதுவும் எடுக்காமலும் நடையைக் கட்டினர்.
சுழலில் சுருண்டது இந்திய அணி
இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் சூழலில் சிக்கி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 9 ரன்னில் வெளியேற, பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியது ஆஸ்திரேலிய அணி.
விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்தியா தடுமாற்றம்!
முதல் விக்கெட் விரைவாக வீழ்ந்த போதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்க்க இந்திய அணியால் முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்றும் மர்னஸ் லபுஸ்சங்னே ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர். 30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 50(103), மர்னஸ் 27 (73) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.