Published : 28,Feb 2023 09:18 PM
வானில் தோன்றும் வண்ணமயமான அதிசயம்! அது என்ன துருவ ஒளி? எப்படி நிகழ்கிறது?

இரவில் வானத்தில் தோன்றும் நட்சத்திரத்தையும் நிலவினையும் கண்டிருக்கிறோம். ஆனால் அதிசயிக்க நிகழ்வுகள் வானத்தில் ஆங்காங்கே நிகழ்த படி தான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்று பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து பூமியை நெருங்கியதாக வான் நிலை ஆராய்சியாளர்கள் கூறி வரும் நேரத்தில், சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாகவும் இதனால் பூமிக்கு ஆபத்து நிகழ உள்ளதா? என்று விஞ்ஞானிகள் ஆராய்சி செய்து வரும் வேளையில், வான் வெளியில் பல அதிசயிக்கதக்க நிகழ்வு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் அரோரா அதாவது துருவ ஒளி (Aurora).
இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்க்டிக்கா பகுதிகளில் சுலபமாகக் காணக்கூடிய வகையில் வானத்தில் தோன்றக்கூடிய இயற்கையான ஒளி காட்சியாகும் . இவ்வொளி வட, மற்றும் தென் துருவங்களில் அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளியானது இன்றல்ல நேற்றல்ல உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். வட துருவத்தில் தோன்றும்போது இது வடக்கு விளக்குகள் எனவும், தென் துருவத்தில் தோன்றும்போது இது தெற்கு விளக்குகள் எனவும் அழைக்கப்படுகின்றது. Aurora Borealis, Aurora Australis
Arora Borealis எனும் பெயரை, 1621 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரும், வானியல் வல்லுநருமான, பியர் கசண்டி (Pierre Gassendi) என்பவர் Aurora என்ற ரோமானியப் பெண் தெய்வத்தின் பெயரையும், வடபருவக்காற்றை கிரேக்க மொழியில் குறிக்கும் Boreas என்ற பெயரையும் சேர்த்து இதற்கு வைத்தார்.
இவ்வகை துருவ ஒளியானது எப்படி ஏற்படுகிறது தெரியுமா? சூரியனில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் வெடித்து பிரபஞ்சத்தில் வீசப்படுகின்றன. அவ்வாறு வீசப்பட்ட துகள்கள் பூமியின் காந்தப்புலத்தினுள் வரும்போது, பூமியின் இரு துருவப் பகுதிகளையும் (வட, தென் துருவம்) நோக்கி இழுக்கப்படுகின்றன. அவ்வாறு இழுக்கப்படும் துகள்கள், வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன் சேர்ந்து, உருவாகும் ஆற்றலே, அரோரா என்ற துருவ ஒளி ஆகும். இவை வானத்தில் ஒளிச் சிதறல்களை உருவாகி, இருண்ட வானத்தின் குறுக்காகவும், நெடுக்காகவும் நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படும் என்கிறார்கள் இந்த அழகை நேரில் பார்த்தவர்கள். மேலும், இந்த அழகை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்றும் சொல்கிறார்கள். இதன் நிறங்கள் பொதுவாக பச்சை, இளஞ்சிவப்பு, சிவப்பு, நீலம் மற்றும் ஊதா, நிறங்களில் ஒளிரக்கூடியது.
வடதுருவ ஒளித் தோற்றமானது பூமியின் எல்லா இடங்களிலும் தோன்றக் கூடியதாக இருந்தாலும், காந்தப்புல சக்தி அதிகம் கொண்ட துருவப்பகுதிகளில் இரவு நேரத்தில் இக்காட்சி தெரியும் சாத்தியம் அதிகம் உள்ளது. பூமியின் துருவப் பகுதிகளிலிருந்து, மத்தியரேகையை நோக்கி நகர்கையில், இந்த அழகிய ஒளியைப் பார்க்கும் சந்தர்ப்பம் அரிதாகி விடுவதாகவும் கூறுகின்றனர்.
ஜெயஸ்ரீ அனந்த்