Published : 27,Feb 2023 07:22 PM
10 ரன்களில் 10 விக்கெட்... இரண்டே பந்துகளில் வெற்றியை எட்டிய எதிரணி! - சுவாரஸ்ய நிகழ்வு

டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற புதிய சாதனையை ஐல் ஆஃப் மேன் அணி படைத்துள்ளது.
கிரிக்கெட் என்றாலே சாதனைகளுக்குப் பஞ்சமிருக்காது. அதிலும் டி20 கிரிக்கெட் வந்த பிறகு, பழைய சாதனைகள் தகர்க்கப்படுவதுடன் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில், ஓர் அணி 10 ரன்னில் அவுட் ஆகி வரலாற்றுச் சாதனை (!) படைத்திருக்கிறது. ஸ்பெயின் மற்றும் ஐல் ஆஃப் மேன் (பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையில் இருக்கும் ஒரு தீவு) என்ற அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 5 போட்டிகள் நிறைவுற்ற நிலையில், தொடரில் ஸ்பெயின் அணி 4-0 (1 போட்டியில் முடிவில்லை) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 6வது மற்றும் கடைசி டி20 போட்டி, நேற்று (பிப்ரவரி 26) நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஐல் ஆஃப் மேன் அணி, 20 ஓவர்களில் 8.4 ஓவர்களை எதிர்கொண்டபோதும் வெறும் 10 ரன்களே எடுத்தது. அதற்குள் 10 விக்கெட்டை பறிகொடுத்தது. அதிலும் என்ன ஆச்சரியமென்றால் (!) அந்த அணியின் 10 விக்கெட்களில் 6 பேட்டர்கள், டக் அவுட் முறையில் ஆட்டமிழந்ததுதான். மற்ற 4 பேட்டர்களில் ஒருவரான ஜோசப் ப்ரோஸ் மட்டும் அதிகபட்சமாக 4 ரன்கள் எடுத்துள்ளார்.
இதர 3 பேட்டர்களும் தலா 2 ரன்கள் எடுத்துள்ளனர். ஒருவர் ரன் எதுவும் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்பெயின் அணியில் கம்ரான் மற்றும் மெக்மூத் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்கள் எடுக்க, பர்ன்ஸ் என்பவர் 4 பந்துகள் வீசி அதில் 2 விக்கெட்கள் எடுத்துள்ளார். கம்ரான் 4 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டனுடன் 4 விக்கெட்களும், மெக்மூத் 4 ஓவர்கள் வீசி அதில் இரண்டு மெய்டனுடன் 4 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.
இந்த ஆட்டத்தில் 5வது மற்றும் 7வது ஓவர்களைத் தவிர மற்ற எல்லா ஓவர்களிலும் விக்கெட் விழுந்தவண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆடிய ஸ்பெயின் அணி, முதல் ஓவரின் 2 பந்துகளிலேயே 2 சிக்ஸர் + நோ பால் ஒன்றின் உதவியுடன் 13 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதற்கு முன், பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக சிட்னி தண்டர் அணி 15 ரன்களில் ஆட்டமிழந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை பட்டியலில் ஐல் ஆஃப் மேன் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்