Published : 27,Feb 2023 07:12 PM

"No. 1 ஆல்ரவுண்டராக மாற, ஜடேஜா இதைத்தான் செய்தார்!"- சுவாரஸ்ய தகவல் பகிரும் ரவி சாஸ்திரி

Ravi-Shastri-recalls-chat-in-2019-that-transformed-Ravindra-Jadeja

ரவீந்திர ஜடேஜா உலக ஆல்ரவுண்டர்கள் வரிசையில் நம்பர் 1 வீரராக இருப்பதற்கு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் ரவி சாஸ்திரி, ஜடேஜா எங்கிருந்து அதற்கான உழைப்பை விதைத்தார் என்பது பற்றிய உரையாடலை பகிர்ந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில், இந்திய அணி 2-0 என இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் இந்தூரில் உள்ள ஹால்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, ஐசிசி தரவரிசையின் ஆல்ரவுண்டர் பட்டியலில் நம்பர் ஆல்ரவுண்டராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 5 மாதம் ஓய்விலிருந்த ரவீந்திர ஜடேஜா!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் விலகிய ரவீந்திர ஜடேஜா, அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரிலும் விளையாடமல் தவிர்த்தார். அதற்குபிறகும், எந்த சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் ரவீந்திரா ஜடேஜா காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஓய்வில் இருந்தார் ஜடேஜா.

I was struggling': Ravindra Jadeja opens up on his injury after making India comeback | Cricket News

உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன் தகுதியை நிரூபித்த ஜடேஜா!

ஓய்விற்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஆடும் அணிக்குள் எடுக்கப்பட வேண்டுமென்றால், அவர் உள்ளூர் தொடரில் பங்குபெற்று விளையாடி தன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்பந்தம் விதித்தது.

Ind vs Aus - Ravindra Jadeja eager to play after recovery from knee injury | ESPNcricinfo

இந்நிலையில் பிசிசிஐ உத்தரவின்படி, கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ரஞ்சிக்கோப்பை தொடரில் முதல் முறையாக தமிழ்நாடு அணிக்கு எதிராக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலானப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கி விளையாடினார், ஜடேஜா. அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த ஜடேஜா, இரண்டாவது இன்னிங்சில் 17.1 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் தனது உடல் தகுதியை நிரூபித்து, டெஸ்ட் தொடரில் ‘தான் உள்ளேன்’ என்பதை உறுதி செய்து, இந்திய அணிக்குள் கெத்தாக அடியெடித்து வைத்தார்.

2 போட்டியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை காப்பாற்றிய ஜடேஜா!

இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக, தனித்துவமான பயிற்சியை மேற்கொண்டு வந்திருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், முதல் டெஸ்ட் போட்டியில் அவரை சமாளித்து விளையாடி நல்ல தொடக்கத்தை அமைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்திர ஜடேஜா, தன்னுடைய சிறப்பாக பவுலிங்கால் ஆட்டம்காட்டி 7 விக்கெட்டுகளை அள்ளியதோடு, வெற்றிக்கு தேவையான 70 ரன்களையும் குவித்து, இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

image

அதேபோல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, அந்த போட்டியையும் வென்று கொடுத்து இந்தியாவை பார்டர் கவாஸ்கர் தொடரில் 2-0 என்ற நிலைக்கு எடுத்து சென்றார்.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி தரவரிசையின் ஆல்ரவுண்டருக்கான பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் என மூன்று இந்திய வீரர்கள் முதல் 5 இடங்களில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக ஆதிக்கம் செலுத்தி வரும் ரவீந்திர ஜடேஜா, எந்த இடத்தில் இருந்து அவரது உழைப்பை விதைக்க தொடங்கினார் என்பது பற்றிய சுவாரசியமான உரையாடல் பற்றி பகிர்ந்துள்ளார், முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

image

என்னால் அந்த உரையாடலை மறக்கவே முடியாது!- ரவி சாஸ்திரி

ஜடேஜாவின் தற்போதைய நிலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரவி சாஸ்திரி, ரவீந்திர ஜடேஜா நம்பர் 1 ஆல்ரவுண்டராக மாறுவதற்கு என்பது உழைத்தார் என்பது பற்றி பகிர்ந்துள்ளார். ஜடேஜா பற்றி பேசியிருக்கும் அவர், “ஜடேஜா தன்னுடைய விளையாட்டில் அதிக பசியுடன் இருக்கிறார். விளையாட்டிற்கு உண்மையாக இருக்கக்கூடிய ஒருவர் அவர். உலகின் நம்பர் 1 வீரராக இப்போது இருக்கும் நிலைக்கு அவர் தகுதியானவர் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

ஜடேஜாவுடன் நான் உரையாடியவற்றில், அதிக உரையாடல்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ஒரு ஸ்பெஷலான உரையாடல் உள்ளது. அதை என்னால் மறக்கவே முடியாது. 2019ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. லார்ட்ஸில் நடைபெற்ற போட்டி அது. அதில் ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை. அப்போது நான் ஜடேஜாவிடம் பேசினேன். எங்களோடு பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் இருந்தார்.

image

நாங்கள் அப்போது ஜடேஜாவிடம், ‘உங்களுக்குள் அனைத்து திறமையும் இருக்கிறது. நீங்கள் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வலைப்பயிற்சியில் பேட்டிங்கிற்காக கொஞ்சம் கடினமாக உழையுங்கள். ஏனென்றால் உங்களிடம் அதிக திறமை இருக்கிறது. உங்களுடைய விளையாட்டில் நீங்கள் சிறந்து விளங்க முடியும். உங்களிடம் அதற்கான திறமை இருப்பதாக நாங்கள் கூறுவது உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். நாங்கள் சொல்வது எல்லாவற்றையும் தாண்டி அந்தத் திறமை உங்களிடம் உள்ளது என்பதை நீங்கள் தான் உணர வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை நீங்கள் நம்புங்கள். அப்போதுதான் அதற்கேற்றார் போல் உங்கள் எதிர்காலத்தை நீங்களே கட்டமைக்க முடியும்’ என்று பேசினோம்.

image

அவர் அதற்குபிறகு தோல்வி என்பதை திரும்பிகூட பார்க்கவில்லை!-ரவி சாஸ்திரி

அந்த உரையாடலுக்குப் பிறகு ஜடேஜா அதற்குபிறகு இறங்குமுகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை. அவர் பேட்டிங்கில் கடினமாக உழைக்க ஆரம்பித்தார். பின்னர் அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், முக்கியமான நேரங்களில் மட்டுமில்லாமல், கடினமான ஆடுகளங்களில் கூட ரன்களை எடுத்து காட்டினார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும், அவர் தன்னுடைய வேலையை சிறப்பாகவே செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் ஜடேஜா போன்ற வீரர்கள் அணியில் இருப்பது, வெளிநாட்டு சூழ்நிலைகளில், ஒரு பயிற்சியாளருக்கு சிம்ம சொப்பனமாகிறது.

image

ஏனென்றால் வெளிநாடுகளில் விளையாடும் போது அணியில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரைத் தான் பயிற்சியாளர் தேர்வு செய்ய வேண்டும். இப்போது இந்திய அணியில் இப்போது இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள் எனும்போது, அதில் ஒருவரை மட்டுமே பயிற்சியாளர் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அது ஒரு கடினமான கனவாக இருக்கும். அஸ்வினின் சாதனையைப் பாருங்கள்... அப்படியே இந்தப்பக்கம் வந்தால், உங்களிடம் ஜடேஜாவும் இருக்கிறார்! இவர்களில் ஒருவர் என தேர்ந்தெடுப்பது, கடினமான ஒன்றாகவும், ஆரோக்கியமான ஒன்றாகவும் இப்போது மாறி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்