Published : 23,Feb 2023 09:01 PM

எடப்பாடி தரப்பு வழக்கின் இறுதி முடிவைக் கொண்டாட முடியாது - ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

The-Edappadi-side-cannot-celebrate-the-end-of-the-case-

”எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த வழக்கின் முதற்கட்டத்தைக் கொண்டாட முடியும்; ஆனால் இறுதி முடிவைக் கொண்டாட முடியாது” என பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

image

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ், மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதன்படி, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

image

உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு குறித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான திருமாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பொதுக்குழுவின் முடிவு செல்லும் என்றால், அவர்களது வழக்கு தானாகவே வென்றிருக்குமே; இவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொள்வதை கருத்தில்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் இவையனைத்தையும் கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்துகொண்டு இருக்கும் வரை, நாங்கள் எங்களது கருத்தில் உறுதியாக நிற்போம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் வரையில், எங்களது உத்தரவை கேட்டுப்பெறும் உரிமை இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறாமல் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்க முடியாது. எடப்பாடி தரப்பினர் இந்த வழக்கின் முதற்கட்டதை கொண்டாட முடியும். ஆனால் இறுதி முடிவை கொண்டாட முடியாது” என தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்