Published : 22,Feb 2023 05:56 PM
ஐசிசி தரவரிசை: 87 வருட சாதனை முறியடிப்பு.. 40 வயதில் நம்பர் 1 பந்துவீச்சாளரான ஆண்டர்சன்!

ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இங்கிலாந்தைச் சேர்ந்த வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளரான 40 வயது ஜேம்ஸ் மைக்கேல் ஆண்டர்சன் 866 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
40 வயதில் தரவரிசையில் சாதனை
கிரிக்கெட் விளையாட்டில் பொதுவாக 30 வயதுக்கு மேல் ஆகும்போது சரியாக விளையாடாமல் போனால், விமர்சனம் எழுவது வழக்கமானது. அதுவும், இளம் வீரர்கள் நன்றாக விளையாடி, 35 வயதுக்கும் மேல் இருக்கும் சீனியர் வீரர்கள் நன்றாக விளையாடாமல் போனால், சொல்லவே வேண்டாம். ஆனால் வயதிற்கும், சாதனைக்கும் சம்பந்தமில்லை என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன் நிரூபித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், 40 வயது இங்கிலாந்து மிதவேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 866 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து மவுண்ட் மாங்கனியில் அந்நாட்டுக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதை அடுத்து ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை 3-வது இடத்திற்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஆண்டர்சன்.
Still going strong at 40!
— ICC (@ICC) February 22, 2023
England's evergreen superstar James Anderson has climbed the summit of @MRFWorldwide ICC Men's Test Bowlers' Rankings
More https://t.co/5xN970tOobpic.twitter.com/OVzCsAP77d
அதிக வயதில் சாதனை புரிந்த வீரர்கள்
மேலும், கடந்த 1936-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி கிரிம்மெட் தனது 44 வயது 2 மாதங்கள் நிறைந்தநிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததே (அதிக வயதில்) சாதனையாக இருந்தது. தற்போது அந்த வரிசையில், தனது 40 வயது 6 மாதங்கள் நிறைந்தநிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்து 87 வருடங்கள் கழித்து சாதனைப் படைத்துள்ளார். வயதெல்லாம் சாதனை செய்வதற்கு ஒரு காரணமே அல்ல என்பதை இதன்மூலம் அவர் நிரூபித்துள்ளார்.
கிளாரி மற்றும் ஆண்டர்சன் ஆகியோருக்கு முன்பாக 1933-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பெர்ட் அயர்ன்மாங்கர் தனது 50-வது வயதிலும், 1929-ம் ஆண்டு இங்கிலாந்து டிச் ப்ரீமேன் தனது 41-வது வயதிலும், 1914-ம் ஆண்டு சிட்னி பேர்னஸ் தனது 40-வது வயதிலும் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளனர். இதில் சிட்சி பேர்னஸ் 932 புள்ளிகளுடன் எல்லாக்காலத்துக்குமான பந்துவீச்சாளர்களில் தரவரிசையில் தற்போது வரை முதலிடத்தில் உள்ளார்.
அதிக விக்கெட்டுகள் பட்டியலில் 3-வது இடம்
2016-ம் ஆண்டு மே மாதம் முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆண்டர்சன், தற்போது வரை நம்பர் 1 இடத்தை 6-வது முறையாகப் பெற்றுள்ளார். இதில் 2018-ம் ஆண்டில் சுமார் 5 மாதங்கள் முதலிடத்தில் நீடித்திருந்தார் ஆண்டர்சன். அத்துடன், ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 682 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், மறைந்த ஆஸ்திரேலிய வீரர் வார்னே 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அஸ்வின் - ஆண்டர்சன்
ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆண்டர்சனுக்கு அடுத்த இடத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 864 புள்ளிகளுடன் இரைண்டாவது இடத்தில் உள்ளார். ஆண்டர்சனுக்கும், அஸ்வினுக்கும் இரண்டு புள்ளிகள் மட்டும் தான் வித்தியாசம் உள்ளது. இதனால், மார்ச் மாதம் 1-ம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும் மற்றும் அகமதாபாத்தில் மார்ச் 9-ம் தேதி நடைபெறவுள்ள 4-வது டெஸ்ட் போட்டியிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினால், அஸ்வின் முதலிடம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில், முதல் டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, நாளை மறுதினம் வெலிங்டனில் நியூசிலாந்து அணியுடன் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்குபெறுகிறது. இதில் ஆண்டர்சன் உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் ஜடேஜா
டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை இந்திய வீரர் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். 460 புள்ளிகளுடன் ஜடேஜா நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக 376 புள்ளிகளுடன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.