Published : 21,Feb 2023 08:15 PM

வறுமையில் வாடும் பொற்றோரிடம் பணத்தாசை காட்டி குழந்தையை வாங்கி விற்றதாக பெண் கைது

Woman-arrested-for-buying-and-selling-child-by-showing-money-to-poor-parents

வறுமையில் வாடும் பெற்றோரிடம் பணத்தாசை காட்டி குழந்தையை வாங்கி விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் மெகர்நிஷா. இவர் வறுமையில் உள்ள பெற்றோர்களிடம் பணத்தாசை காட்டி அதிக பணம் தருவதாகக் கூறி பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையை புவனகிரி பகுதியைச் சார்ந்த நபரிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மெகர்நிஷாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

image

இந்நிலையில், தற்போது மெகர்நிஷாவை வடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு மெகர்நிஷா யாரிடம் குழந்தையை வாங்கி விற்பனை செய்தார். அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா. எவ்வளவு ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது என்ற முழு விபரம் தெரியவரும்.

முதற்கட்ட விசாரணையில், பணத்திற்காக இடைத்தரகர் போல் வறுமையில் இருக்கும் பெற்றோரிடம் பணத்தாசை காட்டி குழந்தையை வாங்கி பல பகுதியில் விற்பனை செய்து இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த விசுவநாதன் என்பவர் தனது உறவினர் குழந்தை என்று கூறி மூன்று மாத குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சிறுவர் உதவிக்கரம் தொலைபேசியின் மூலம் தகவல் அளித்துள்ளனர்.

image

இதனை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து யாருடைய குழந்தை? எங்கு வாங்கி விற்பனை செய்தனர் என்பது குறித்து கடலூர் மாவட்டத்தில் பல பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கும் நிலையில் வடலூர் பகுதியில் சேர்ந்த சுடர்விழி (37), மெகர்நிஷா(67), சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஷீலா (35), ஆனந்த் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
வறுமையில் உள்ள பெற்றோர்களிடம் பணத்தாசை காட்டி ஒரு குழந்தைக்கு மூன்று லட்ச ரூபாய் பணம் தருவதாகக்கூறி பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தையை  புவனகிரி பகுதியை சார்ந்த நபரிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.