டர்னிங் பிட்ச்சில் இந்தியாவை யாராலும் வீழ்த்த முடியாதா? - ஆஸி. தொடர் தோல்வி சொல்வதென்ன?

டர்னிங் பிட்ச்சில் இந்தியாவை யாராலும் வீழ்த்த முடியாதா? - ஆஸி. தொடர் தோல்வி சொல்வதென்ன?
டர்னிங் பிட்ச்சில் இந்தியாவை யாராலும் வீழ்த்த முடியாதா? - ஆஸி. தொடர் தோல்வி சொல்வதென்ன?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து, இந்திய அணிக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில், முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணிக்கும், நம்பர் 2 டெஸ்ட் அணிக்கும் இடையேயான தொடர் என்பதால், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியையே கவனித்து வருகின்றனர்.

ஆஸஸ் தொடரில் 4-0 என வெற்றி! 1 தோல்வியுடன் வெற்றி கேப்டனாக ஜொலித்த கம்மின்ஸ்!

உலகின் நம்பர் 1 வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஆஸ்திரேலியா ஏறுமுகத்தையே சந்தித்து வந்தது. பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸஸ் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலியா, அபாரமான ஆட்டதை வெளிப்படுத்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என வென்று அசத்தியது. அதற்கு பிறகு 12 போட்டிகளில் பங்கேற்ற அணி, இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் 3 போட்டிகளை டிரா செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு விளையாடும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் நிலைத்து நின்று ஆட முடியாமல் தடுமாறி வருகின்றனர். 2 போட்டிகளில் விளையாடியிருக்கும் உலகின் நம்பர் 1 அணி, மிகப்பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது பரிதாபமாகவே இருக்கிறது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, 2ஆவது டெஸ்ட்டில் 113 ரன்களில் சுருண்டு இதுவரை இந்திய மண்ணில் பதிவுசெய்த குறைவான ரன்களை பதிவுசெய்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பீல்டிங் நிறுத்த தெரியவில்லை!- மார்க் வாஹ்

ஆஸ்திரேலியாவின் படுதோல்விக்கு பிறகு உரையாடலில் பேசியிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாஹ், பேட் கம்மின்ஸ் செய்திருந்த பீல்ட் செட்டிங் சிறப்பானதாக இல்லை என குற்றஞ்சாட்டினார். குறிப்பாக “புஜாராவிற்கு எதிராக டீப் பாய்ண்ட் பீல்டிங் நிறுத்தியதற்கு பதிலாக, ஆஃப் சைடை கவர் செய்வதற்கு பேட்ஸ்மேன் அருகிலேயே பீல்டரை நிறுத்தியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

திரும்பும் பிட்சில் எந்த அணியை விடவும் சிறப்பாக விளையாடக்கூடிய அணி இந்தியா!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதற்கு பிறகு பேசியிருக்கும் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பந்து எளிதில் திரும்பக்கூடிய ஆடுகளங்களில் எந்த அணியை விடவும் இந்தியா சிறப்பாக விளையாடக்கூடிய அணி என்று தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திரும்பக்கூடிய ஆடுகளங்களில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் எந்த அணியை விடவும் சிறப்பாக ஆடக்கூடிய அணி இந்தியா. போட்டியின் எந்த நிலையில் இருந்தும் இந்தியாவால் சிறப்பாக விளையாட முடியும். இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

3ஆவது போட்டியின் இந்தூர் ஆடுகளம் எப்படியிருக்கும்?

3ஆவது டெஸ்ட் போட்டியானது தரம்சாலா ஸ்டேடியத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தூரில் இருக்கும் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தூர் ஆடுகளமானது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மட்டுமல்லாமல், வேகப்பந்துவீச்சுக்கும் ஏதுவான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தூரில் முதல் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ஸ்கோராக 350+ ரன்களும், 4ஆவது இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 150+ ரன்களாகவும் இருக்கிறது. இதனால் முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கையே தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம். மேலும் இந்த ஆடுகளத்தில் இரண்டு போட்டிகளில், 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com