Published : 19,Feb 2023 03:29 PM
ஒரு நாள் லீவ் போட்டதால் பெண்ணுக்கு கிடைத்த ரூ3 லட்சம்: பரிதாபம் காட்டாத முதலாளிக்கு தண்டனை

பணியாற்றும் பெண்களுக்கு அவர்களின் மாதவிலக்கு சமயங்களில் கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என உலகம் முழுவதும் தொடர்ந்து கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை சில தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அண்மையில் கூட ஐரோப்பாவின் முதல் நாடாக ஸ்பெயினில் இது குறித்த சட்டமசோதா அதன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை எல்லா நாட்டில்லும் தவறாது நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சலூன் ஒன்றில் பணியாற்றி வந்தார். திங்கள் கிழமையன்று காலை பணிக்கு செல்லவிருந்த நிலையில் அவருக்கு உடல்நிலை முடியாமல் போனதால் தன்னால் இன்று வர முடியாது எனக் கூறி முதலாளிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். அந்த முதலாளியோ விடுப்பு கேட்ட பெண்ணை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறார்.
இதனையடுத்து தொழிலாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்ததால் அந்த பார்பர் ஷாப் உரிமையாளருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது.
இங்கிலாந்தின் லாண்டாஃப் வடக்கு பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்டியன் டோனெல்லி என்பவரின் பார்பர் ஷாப்பில்தான் செலின் தோர்லி என்ற பெண் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தன்று ஹாலோவீன் பார்ட்டியில் பங்கேற்றிருந்ததை அடுத்து செலின் தோர்லியால் மறுநாள் திங்களன்று பணிக்கு செல்ல முடியாமல் போயிருக்கிறது.
இதனால் விடுப்பு கேட்டு கிறிஸ்டியன் டோனெல்லிக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில், “ஹே கிறிஸ். நான் சொல்வது உங்களுக்கு கோபமாகத்தான் இருக்கும். ஆனால் மன்னித்துவிடுங்கள். இன்று என்னால் பணிக்கு வர முடியும் என தெரியவில்லை. ஏனெனில் என் உடல்நிலை இப்படி மோசமாகும் என நினைக்கவில்லை. சரியாகிவிடும் என எண்ணினேன். என்னால் இன்று படுக்கையறையில் இருந்து கூட எழ முடியவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைக் கண்ட டோனெல்லி, செலின் பொய் கூறுகிறார் என நினைத்து “நீங்கள் வரவே தேவையில்லை. ஏனெனில் உங்கள் வேலை பறிக்கப்பட்டுவிட்டது” என பதிலளித்திருக்கிறார். முன்னதாக சம்பவம் நடந்த நாளுக்கு முன்பே அதாவது வெளியன்று, திங்கள் கிழமையன்று வராமல் இருந்துவிடாதே என செலின் தோர்லியிடம் கிறிஸ்டியன் தோர்லி கூறியிருக்கிறார்.
இருப்பினும் செலினுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் திங்களன்று வரமுடியாமல் போயிருக்கிறது. இதனால் ஆத்திரமான கிறிஸ்டியன் செலினை பணி நீக்கம் செய்திருக்கிறார். இதனையடுத்து தொழிலாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் செலின் வழக்கு தொடரவே அதன் மீதான விசாரணை தற்போது நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, “நேர்மையாக உண்மையான காரணத்தை சொல்லியே செலின் விடுப்பு கேட்டிருக்கிறார். மாதவிடாயால் அதீத வலி ஏற்பட்டதாலேயே செலினுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அவரை கவனித்துக்கொள்வதற்காக செலினின் மாமியாரும் அன்று விடுமுறை எடுத்திருக்கிறார்” என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து உண்மை தெரியாமல் செலினை தடாலடியாக பணியில் விட்டு நீக்கியதற்காக கிறிஸ்டியன் டோனெல்லிக்கு 3,453 பவுண்ட் அபாரதம் விதித்திருக்கிறது தீர்ப்பாயம். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயாகும்.
முன்னதாக விசாரணையின் போது பேசியிருந்த அந்த பார்பர் ஷாப் ஓனர் கிறிஸ்டியன் டோனெல்லி, வழக்கமாக திங்கள் கிழமையன்று ஏதேனும் காரணம் சொல்லி விடுப்பு கேட்பதை செலின் வழக்கமாக கொண்டிருப்பார். சம்பவம் நடந்த போதும் அதே மாதிரி பொய்யாகத்தான் காரணம் சொல்லியிருப்பார் என எண்ணியே அவ்வாறு செய்ததாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.