டார்கெட் 10-ன்னா 1 ரன்னுல அவுட்டாகிடுவார்; டீம்ல வேற ஆளே இல்லையா? கடுப்பான ஃபேன்ஸ்!

டார்கெட் 10-ன்னா 1 ரன்னுல அவுட்டாகிடுவார்; டீம்ல வேற ஆளே இல்லையா? கடுப்பான ஃபேன்ஸ்!
டார்கெட் 10-ன்னா 1 ரன்னுல அவுட்டாகிடுவார்; டீம்ல வேற ஆளே இல்லையா? கடுப்பான ஃபேன்ஸ்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேஎல் ராகுல் சொதப்பி இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

இந்தியாவின் ஓபனிங் பேட்டரான கேஎல் ராகுல், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பேட்டிங் பார்மை திரும்ப மீட்க முடியாமல் திணறி வருகிறார். ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆனது, அவர் மீதான நம்பிக்கையில் தொடர்ந்து பல வீரர்கள் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருந்தாலும், வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட கேஎல் ராகுல்!

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த கேஎல் ராகுல் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவர், மீண்டும் அணிக்குள் இடம்பெற்றாலும், அவருடைய பழைய பார்மை மீட்டுக்கொண்டுவருவதில் சிக்கலை கண்டுவந்தார்.

பின்னர் மீண்டும் 2022 ஐபிஎல் தொடரில் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் அவதியடைந்த அவர், மீண்டும் ஓய்வில் இருந்தார். 2022 ஐபிஎல் தொடருக்கு பிறகு அவர் எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்விலிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மட்டுமில்லாமல், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

ஜடேஜா, கோலி போன்ற வீரர்கள் பிட்னஸை நிரூபிக்க வேண்டும்.. ஆனால் ராகுலுக்கு மட்டும் வேண்டாம்?

இந்தியாவின் நட்சத்திர பேட்டரான விராட் கோலி, தொடர்ந்து அவருடைய பேட்டிங் பார்மை கொண்டுவர முடியாமல் திணறிய போது, அவர் மீதான தாக்குதல்கள் அதிகமாகவே இருந்தன. அவரை முதலில் போய் முதல்தர போட்டிகளில் விளையாட சொல்லுங்கள் என்ற குரல்களும் ஒலித்தன. அதே போல், தற்போது காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜடேஜாவும், ஓய்வில் இருந்து அணிக்குள் திரும்பிய போது, ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்று விளையாடி தன்னுடைய பிட்னஸை நிரூபித்த பிறகு தான் அணிக்குள் எடுத்துவரப்பட்டார்.

ஆனால் கே.எல்.ராகுலுக்கு மட்டும் எந்த நிர்பந்தனையும் வைக்கப்படாமல், அவர் நேரடியாக அணிக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார். அதற்கும் மேலாக அவருக்கு கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. டி20 உலகக்கோப்பையிலும் பங்குபெற்று சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். மேலும் தற்போது தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்றையப் போட்டியில் 1 ரன்னில் வெளியேறிய ராகுல்!

தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், அடுத்தடுத்த வாய்ப்புகளில் அவர் தன்னுடைய பேட்டிங்கை நிரூபிக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பிக்கொண்டு தான் வருகிறார். ஒரு டெஸ்ட் போட்டியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஒரே அடியாக சொதப்பி வந்தால், அது அணிக்கு பெரிய பாதகமாகவே அமையும்.

ஆஸ்திரெலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 20 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்னிலும் வெளியேறி, மேலும் மேலும் அணிக்கு சோதனையையே ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், வாய்ப்பு கிடைக்காமல் பல வீரர்கள் வெளியில் அமர வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சரியாக விளையாடாத ஒருவருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் வாய்ப்பு வீணாக்கப்படுவது மட்டுமில்லாமல், தொடர்ந்து இந்திய அணி இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து வருவது, இந்திய ரசிகர்களிடையே கோபத்தை வரவைத்துள்ளது.

10 ரன் டார்கெட்டா இருந்தாலும் 1 ரன்னில் அவுட்டாகிவிடுவார்- ட்ரோல் செய்துவரும் ரசிகர்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு 114 ரன்களே தேவை என்ற இடத்தில், இந்தியாவின் ஓபனிங் பேட்டரான கே எல் ராகுல் வழக்கம் போல 1 ரன்னில் நடையை கட்டி மீண்டும் ஏமாற்றத்தையே பரிசளித்தார். இந்நிலையில் கே எல் ராகுல் சொதப்பல் ஆட்டம் தொடர்ந்து கொண்டே வருவதால் கொதிப்படைந்துள்ள இந்திய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

ட்விட்டரில் பதிவு செய்துள்ள ஒரு ரசிகர், “ கேஎல் ராகுலுக்கு பெரிய மரியாதை. அவர் ஏதேனும் ஒரு தனியார் வேலையில் இருந்திருந்தால், எப்போதே layoff-ல் வெளியேற்றப்பட்டிருப்பார். அப்படி இருந்தும் பிசிசிஐ-க்கும் ராகுலுக்கும் அப்படி என்ன காதல் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்திய அணிக்கு அவரால் வெறும் சுமை தான் மிச்சம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மற்றொருவர் கூறுகையில், “ இன்னும் எத்தனை வாய்ப்புகள் தான் கேஎல் ராகுலுக்கு கொடுக்கப்போகிறார்கள். அவருடைய சொதப்பலான இந்த பேட்டிங்கை பார்ப்பதற்கு சகிக்கவே இல்லை” என்று கூறியுள்ளார்.

மற்ற ரசிகர்கள், “ நான் எப்பவும் போல அவுட்டாகிட்டன்”, “ பாஸ், ஆஸ்திரேலியாவோட முதல் இன்னிங்ஸ் லீட் ரன்னான 1 ரன்னை நான் பார்த்துக்குறன், மத்ததெல்லாம் நீங்க பார்த்துக்கோங்க” என நகைச்சுவையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com