"எங்களை இழிவாக பேசிவிட்டு எங்ககிட்டயே ஓட்டுகேட்டு வர்றீங்களா"- நாதக வேட்பாளர் முற்றுகை!

"எங்களை இழிவாக பேசிவிட்டு எங்ககிட்டயே ஓட்டுகேட்டு வர்றீங்களா"- நாதக வேட்பாளர் முற்றுகை!
"எங்களை இழிவாக பேசிவிட்டு எங்ககிட்டயே ஓட்டுகேட்டு வர்றீங்களா"- நாதக வேட்பாளர் முற்றுகை!

ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அருந்ததியர் மக்களை இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இப்புகாரையடுத்து, சீமானின் அடுத்தடுத்த பிரசாரத்திற்கு தடைவிதிக்க வேண்டுமெனவும், அக்கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் சமூக நீதி மக்கள் கட்சியின் சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார்‌ மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய பிரசார பொதுக்கூட்டமொன்று, கடந்த 13 ம் தேதி திருநகர் காலனியில் நடைபெற்றது. அதில் சீமான் "அருந்ததியர் சமூக மக்கள் தூய்மைபணி செய்பவர்கள்; ஆந்திராவிலிருந்து ஆதிக்குடிகள், அருந்ததியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்" என பேசிய அம்மக்களை இழிவுபடுத்தியதாக, சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் பகுஜன் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் குறிப்பிட்ட சாதியின் பெயரை இழிவாக பேசியதால் சீமானின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதித்து கைது செய்யவேண்டும் என்றும், வேட்பாளர் மேனகாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கனிராவுத்தர்குளம் அடுத்த காந்தி நகர் காலனியில் வேட்பாளர் மேனகா மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களை அப்பகுதி மக்கள் திடீரென எதிர்த்து வெளியே அனுப்ப முயன்றனர்.

குறிப்பாக அப்பகுதியில் இருந்த அருந்ததியர் சமுதாய மக்கள், “எங்களை குறித்து இழிவாக பேசி எங்களிடமே வாக்கு கேட்க வருவதா?” என நாம் தமிழர் கட்சியினருடன் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து நாம் தமிழர் கட்சியினர் வெளியேறினர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com