Published : 16,Feb 2023 09:06 PM

ஒரே ஆண்டில் 12000 பேர் பணி நீக்கம்.. எதிர்ப்பை காட்டிய சுவிட்சர்லாந்து கூகுள் ஊழியர்கள்!

Google-Layoffs-Google-employees-in-Switzerland-stage-walkout-over-mass-layoffs

பணிநீக்கம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பொருளாதார மந்தநிலை காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் அண்மையில் பணிநீக்க நடவடிக்கையை அமல்படுத்தியது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். கூகுள் நிறுவன வரலாற்றில் ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். சக ஊழியர்களின் வேலை இழப்பை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் கூகுள் நிறுவன ஊழியர்கள், தாங்களும் எப்போது வேண்டுமானாலும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்கிற கவலையில் உள்ளனர்.

image

இந்தநிலையில், கூகுள் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். கூகுள் நிறுவனத்தின் சுவிட்சர்லாந்து அலுவலக பிரிவு ஊழியர்கள் தங்களது மதிய உணவு நேரத்தில் வெளிநடப்பு செய்ததாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 250 ஊழியர்கள் கூகுள் அலுவலகத்திற்கு வெளியே நின்று பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்; அவர்களுடன் கூகுள் தலைமை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்