Published : 16,Feb 2023 08:45 PM

தனி சாம்ராஜ்யம்! 1990களில் பங்கு சந்தையில் மோசடி மன்னனாக வலம்வந்த ’ஹர்ஷத் மேத்தா’வின் கதை

பணம் காய்க்கும் மரமான பங்குச்சந்தையில் 1990களிலேயே மோசடி மன்னனாக வலம் வந்து, ஒரு புது சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ஹர்ஷத் மேத்தா. யார் இந்த ஹர்ஷத் மேத்தா? பங்குச் சந்தை மோசடி மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக உச்சம் தொட்டது எப்படி? ஒரே ஒரு பத்திரிக்கை செய்தி அவரது வாழ்வை எப்படி புரட்டி போட்டது.. விரிவாக அவரது கதை பற்றி இங்கு பார்க்கலாம்.

அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் அறிக்கையும்

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றவர், ஆசியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான கெளதம் அதானி. இன்னும் அந்தப் பெயரில், தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை வாசகர்களுக்கு தீனியாகத் தந்துகொண்டே இருக்கின்றன, ஊடகங்கள். “போலி நிறுவனங்களைத் தொடங்கி வரிஏய்ப்பிலும், பண மோசடியிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது” என்பதுதான் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் செய்தி. அதன் பிறகு அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்துவருகின்றன.

image

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், எஃப்.பி.ஓ. பங்குகளின் விற்பனையை திரும்பப் பெற்றபோதும், தாம் வாங்கிய கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்த முன்வந்தபோதிலும்கூட, அதானியின் பங்குகள் வீழ்ச்சி என்பது தொடர்ந்து அடிமேல் அடி வாங்கி வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் பலரும் பதற்றத்துடனேயே உள்ளனர். இது, இன்றைய நிலை என்றாலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பே பங்குச் சந்தையில் மோசடி சம்பவங்கள் நடைபெற்ற கதைகளும் வரலாற்றுப் பக்கங்களில் பதிவிடப்பட்டிருக்கின்றன.

’பங்குச்சந்தையின் ராஜா’ ஹர்ஷத் மேத்தா

”பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றால், அந்தப் பணத்தை சம்பாதிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்” என்பதுதான் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் கதை. அந்தப் படத்தில் ”நான் யாரையும் ஏமாத்தலை, ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்; ஒருத்தனோட ஆசைய தூண்டணும், அப்போதான் அவன ஈஸியா ஏமாத்த முடியும்” என ஹீரோ வசனம் பேசுவார். அந்த வசனத்தைப் போன்றதுதான் பங்குச் சந்தை நிலவரமும். இந்த பங்குச்சந்தைக்கே ராஜாவாக திகழ்ந்தவர் ஹர்ஷத் மேத்தா. 1990களில் ஹர்ஷத் மேத்தாவை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது, இந்த பங்குச் சந்தைதான். எப்படி, இன்று அதானி எழுந்த வேகத்தில் வீழ்ந்தாரோ, அதேபோல்தான் ஹர்ஷத் மேத்தாவும் எழுந்த வேகத்தில் வீழ்ந்தார்.

image

பங்குச்சந்தையில் வர்த்தகம், முதலீடு என இரு பிரிவுகள் இருந்தாலும், வர்த்தகத்துக்கே மதிப்பு அதிகம், காரணம், குறுகிய காலத்தில் பங்குகளை வாங்கி விற்றுப் பணம் சம்பாதித்துவிட முடியும். அதனால்தான் பலரும் பங்குச் சந்தையில் வர்த்தகத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். தவிர, பங்குச் சந்தையில் பண முதலைகள் செயற்கையாகக்கூட விலை மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ஓர் உதாரமணமாகத் திகழ்ந்தவர் ஹர்ஷத் மேத்தா. அதனால்தான் இவர் 1990களில் ’பங்குச்சந்தையின் அமிதாப்பச்சன்’, ’ஷேர் மார்க்கெட்டின் சூப்பர் ஸ்டார்’, ’பங்குச்சந்தையின் பிக் புல்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

யார் இந்த ஹர்ஷத் மேத்தா?

இன்று பிரதமர் மோடியையும், தொழிலதிபர் அதானியையும் உச்சத்தில் கொண்டுபோய் வைத்திருக்கும் அதே குஜராத் மண்தான் ஹர்ஷத் மேத்தாவையும் ஈன்றெடுத்த பூமியாகும். ஹர்ஷத் சாந்திலால் மேத்தா என்ற முழுப்பெயரைக் கொண்ட ஹர்ஷத், 1954ஆம் ஆண்டு குஜராத்தின் ராஜ்கோட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். குஜராத்திலேயே தன்னுடைய கல்வியை முடித்த ஹர்ஷத், வேலை தேடி வெறும் 40 ரூபாயுடன் மும்பைக்குப் புறப்பட்டார். மும்பையில் பல நிறுவனங்களில் விற்பனையாளராக பணியைத் தொடங்கிய அவர், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் ஏஜெண்டாக இருந்தார். எந்த வேலையைச் செய்தபோதும், அவரது ஆர்வமெல்லாம் பங்குச் சந்தையின்மீதே இருந்தது. இன்று இணையம்மூலம் செய்யப்படும் பங்குச் சந்தை வியாபாரம், அன்று மாட்டுச் சந்தைபோல் பொதுவான இடத்தில் வைத்து பங்குகளை ஏலம் விடுவது நடைபெறும். இதற்காக உணவு இடைவேளையில் ஓடிச்சென்று பங்கு வியாபாரம் பற்றிய நுணுக்கங்களை ஆராய்வதே, ஹர்ஷத்தின் முதல் வேலையாக இருந்தது.

image

வங்கிகளில் இருந்த ஓட்டை!

ஒருகட்டத்தில் இன்சூரன்ஸ் வேலையை விட்டொழித்துவிட்டு முழுநேரமாக பங்குச் சந்தையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதற்காக அம்பலால் என்ற பங்குதாரரிடம் துணை புரோக்கராகச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வெளியாக, அதனால் பங்குச் சந்தையும் உயரும் என்பதைக் கணித்திருந்தார் ஹர்ஷத். அதன்மூலம், குறுகிய நாட்களிலேயே கோடீஸ்வரராக வேண்டும் என்று ஆசை கொண்டதுடன், அதற்காக பல வழிகளைத் தேடினார். இறுதியில் வங்கிகளில் இருந்த ஓட்டை மூலம் மோசடிக்கான வழியைக் கண்டுபிடித்தார்.

அதாவது, அன்றைய காலத்தில் பெரிய வங்கிகள் சிறிய வங்கிகளுக்கு நேரடியாக கடன் வழங்காமல் அதற்கென சில புரோக்கர்களை வைத்துக்கொண்டன. இந்த புரோக்கர்கள் மூலம் சிறிய வங்கிகளுக்கு கடன் வழங்கப்படுவதுடன், அதற்கான வட்டி எவ்வளவு, எத்தனை நாட்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட விவரங்களும் இந்த புரோக்கர்கள் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், அதைத் திருப்பிச் செலுத்துவது வரை எல்லாமே இந்த புரோக்கர்கள் மூலம்தான் நடைபெறும். இந்த வித்தையை நன்கறிந்த ஹர்ஷத், அதை தம் சொந்த விஷயத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

image

பங்குச் சந்தையில் மக்கள் பணம்

அதாவது, சிறிய வங்கிக்கு பெரிய வங்கி கடனாகத் தந்த ஒரு தொகையை, அந்த வங்கிக்குக் கடனாகக் கொடுக்காமல், நேரிடையாக பங்குச் சந்தையில் கொண்டுபோய் போட்டார், ஹர்ஷத். இன்னும் சொல்லப்போனால், தன் பணத்தை முதலீடு செய்யாமலேயே மக்களின் பணத்தைக் கொண்டுபோய் பங்குச் சந்தையில் போட்டார். அதன் பலன், அவர் நினைத்ததுபோல் லாபம் கிடைக்க ஆரம்பித்ததுடன் மறுபுறம் கமிஷனும் கிடைத்தது. இப்படி, அவர் செலுத்திய தொகை எல்லாமே பெரிய அளவில் லாபம் பார்க்க ஆரம்பித்தது. இந்த லாபத்தைத்தான் சிறிய வங்கிக்கு பெரிய வங்கி கடன் கொடுத்ததாய்க் கணக்கு காட்டி விடுவார், ஹர்ஷத். இத்திட்டத்துக்கு உடந்தையாய் அக்கால வங்கியில் பணிபுரிந்த ஊழியர்களும் சிலர் இருந்தனர், என்பது தனிக்கதை.

சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஹர்ஷத்

இதன்மூலம், சந்தையில் விலைகுறைவான பங்குகளை லட்சக்கணக்கில் வாங்கி, அதில் செயற்கையாக விலை ஏற்றத்தை உண்டாக்கி கோடிக்கணக்கில் பணம் குவித்த ஹர்ஷத், மும்பை வோர்லி கடற்கரையில் சொகுசு வீடுகள், சொகுசு கார்கள் என ஜாலியாக வாழ ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, அரசுக்கு முன்கூட்டியே ரூ.26 கோடி வரி செலுத்தி, தான் கவனிக்கத்தக்க நபராக ஹர்ஷத் மேத்தா காட்டிக்கொண்டார். அவருடைய இந்த பங்குச்சந்தை ஊழல், அப்போது இந்தியாவின் பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்தது. ஆனால், இதை எத்தனை காலத்திற்கு செய்ய முடியும்? எவ்வளவு விரைவில் ஹர்ஷத் உயர்ந்தாரோ அதே வேகத்தில் வீழ்ந்தார். ஆம், ’பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்கிற பழமொழியைப்போல ஹர்ஷத் மேத்தாவின் கதையும் ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தது.

image

வெளிச்சத்துக்கு வந்த பங்குச் சந்தை மோசடி

”பங்குச்சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் இயல்பானது அல்ல, அது செயற்கையானது” என்கிற விவரத்தையும், ஹர்ஷத் மேத்தா வங்கிகளில் தவறாகப் பணம் பெற்று, அதைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்” என்பது குறித்தும் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நிருபரான சுசிதா தலால், 1992ஆம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். அதன் விளைவு, விசாரணை நடத்தப்பட்டதில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு போலியான வங்கி ஆவணங்கள் கொடுத்து பங்குகளில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது மோசடியால், வங்கிகள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டன. இதனால் பங்குச் சந்தை நிலைகுலைந்தது. அவர்மீது 72 குற்றங்கள் சுமத்தப்பட்டு, 600க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக ஹர்ஷத் மேத்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் வெளியே வந்த ஹர்ஷத் மேத்தா அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் மீதே லஞ்சப்புகார் கூறி நாட்டையே உலுக்கினார். ஆனால், இவர் மீதான வழக்கில், நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது. ஆனால், தண்டனையை முழுமையாக அனுபவிக்கும் முன்பாக, கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஹர்ஷத் மேத்தா உயிரிழந்தார்.

image

வெப்சீரிஸில் ஹர்ஷத் மேத்தாவின் கதை

ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை பற்றிய ஊழல் கதையை, பத்திரிகையாளர்களான சுசிதால் தலால், தேபஷிஷ் பாசு ஆகியோர் 'Who Won, who Lost, who Got Away' என்னும் தலைப்பில் புத்தகமாய் எழுதினர். இதை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ஹன்சல் மேத்தா, ஜெய் மேத்தா ஆகியோர் 'Scam 1992: The Harshad Mehta Story' என்ற பெயரில் வெப் சீரிஸாக எடுத்தனர். இது, 'சோனி லைவ்' ஓடிடி தளத்தில் வெளியானது. ஹர்ஷத் மேத்தா இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய மனைவி ஜோதி மேத்தா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் https://harshadmehta.in/ என்ற இணையதளத்தைத் தொடங்கி கணவர் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை அதில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏமாறுபவனைப்போலவே, ஏமாற்றுபவனும் சரிசமமான வேதனையைப் பெறுவான் என்பதற்கு ஹர்ஷத் மேத்தாவின் வாழ்வும் ஓர் உதாரணம்.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்