Published : 16,Feb 2023 01:22 PM
"இனி உனக்கு வெளிச்சமே இல்லை"- நிறவெறியால் 10 பேரை கொன்ற இளைஞர் வழக்கின் தீர்ப்பில் அதிரடி!

கடந்த மே மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ என்ற நகரிலுள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் (பாய்டன் கெண்ட்ரான்) அச்சமயத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அந்த இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள் முழுக்க சிறை என்ற தண்டனையை விதித்துள்ளது. தீர்ப்பின்போது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பலரும் நீதிமன்றத்தில் பேசத்தொடங்கியத்டால், மிகவும் எமோஷனலாக இந்த தீர்ப்பு நேரம் அமைந்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டனர்; அவர்களில் 10 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள் என்று பஃப்பலோ நகர காவல்துறை ஆணையர் அப்போதே ஜோசப் கிராமக்லியா தெரிவித்திருந்தார். ஆகவே இச்சம்பவம் முழுக்க முழுக்க இனவெறி - நிறவெறியால் நிகழ்ந்திருக்கலாமென சொல்லப்பட்டது. பின்னர் குற்றவாளியின் வாக்குமூலத்தால் அது உறுதியானது.
இந்நிலையில் இதில் கைதான இளைஞர் பாய்டன் கெண்ட்ரான், இன்று நீதிமன்றத்தில் “பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களுக்கு நான் ஏற்படுத்திய வலிகளுக்காக மன்னிப்பு கூறிக்கொள்கிறேன். உங்கள் நேசத்துக்குரியவர்களளின் வாழ்வை பறித்துக்கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். மே 14, 2022 அன்று, நான் எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் இன்று நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. அன்றைய தினம் மிக மோசமாக நான் நடந்துக்கொண்டேன். அன்று கருப்பினத்தவர்கள் என்பதாலேயே அம்மக்களை சுட்டுக்கொன்றேன் நான். இப்போது நினைத்துப்பார்த்தால், நான்தான் அதையெல்லாம் செய்தேனென என்னாலேயே நம்பமுடியவில்லை.
இணையத்தில் எழுதியிருந்தவற்றை வாசித்துவிட்டு, வெறுப்பின் காரணமாக அப்படி செய்துவிட்டேன். நான் செய்த எதையும் என்னால் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாதென எனக்கு தெரியும். ஆனால் அப்படி திருப்பி எடுத்துக்கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும்… என்னை பார்த்து, என்னை முன் உதாரணமாக கொண்டு செயல்பட வேண்டாமென கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” என்றுள்ளார் கண்ணீருடன்.
இதைக்கேட்ட பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், தங்கள் இயலாமையை வெளிப்படுத்த தொடங்கினர். அந்த துப்பாக்கிச்சூடு, தங்கள் வாழ்வை எப்படி மாற்றியதென உணர்வுபொங்க அவர்களும் பேசியுள்ளனர். இதைக்கேட்ட குற்றவாளி, ஒருகட்டத்தில் அழத்தொடங்கியிருக்கிறார்.
தொடர்ந்து பெண் நீதிபதி சூசன் ஈகன் தன்னுடைய தீர்ப்பை வாசிக்கத்தொடங்கினார். அத்தீர்ப்பில் அவர், “ஒரு நாகரீக சமுதாயத்தில் உனக்கோ அல்லது உனது அறியாமை, வெறுப்பு மற்றும் தீய சித்தாந்தங்களுக்கோ இடமில்லை. உனக்கு எந்தக் கருணையும் கிடையாது, உன்னை புரிந்துகொள்ளவும் முடியாது, இரண்டாவது வாய்ப்பும் கொடுக்க முடியாது. இக்குடும்பங்களுக்கு நீ கொடுத்த வேதனையென்பது, அவை எல்லாவற்றையும் விட பெரியது. நீ காயப்படுத்திய ஒவ்வொருவரும், இந்த சமூகத்தில் மிகமிக முக்கியமானவர்கள். விடுதலையான ஒரு மனிதனாக, ஒரு நாளின் ஒளியை... வெளிச்சத்தை இனி உன்னால் பார்க்கவே முடியாது” என மிகக்கடுமையாக கூறினார்.
குறிப்பிட்ட நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞரொருவர் பேசுகையில், “இந்த தண்டனை மூலம், இந்த வழக்கு சட்டப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் நிகழ்கின்ற பெருவாரியான பிரச்னைக்கு இந்த தீர்ப்பு மட்டுமே முடிவல்ல. ஒரு சமூகம் முன்னோக்கிச் செல்ல, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இது நிச்சயமாக தீர்மானித்துவிடாது. Justice-ல் (நீதி) உள்ள J, சின்ன j-வாக தான் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நீதியை நிலைநாட்ட நாம் பெரிய J போடும் அளவுக்கு செல்ல வேண்டியுள்ளது” என்று பேசியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலிலிருந்து காயங்களுடன் தப்பித்த கிரிஸ்ட்டோஃபர் ப்ராடன் என்பவர், நீதிமன்றத்தில் பேசுகையில் “எனக்கு அன்று துப்பாக்கிச்சூட்டில் கால்களில் காயம்பட்டது. என்னை மீட்டவர்கள் அந்த சூப்பர்மார்க்கெட்டிலிருந்து என்னை தூக்கிக்கொண்டு சென்றபோது, உயிரற்று கிடத்த சடலங்களை பார்த்தபடியே சென்றேன் நான். அந்தக் காட்சி, இப்போதுவரை ஒவ்வொரு நாளும் எனக்குள் எழுந்து என்னை அச்சுறுத்துகிறது. அன்றிலிருந்து நான் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்குவதே இல்லை; பயந்து பயந்து எழுகிறேன். Post-Traumatic Stress disorder-ல் பாதிக்கப்பட்டு தவிக்கிறேன். ஆனாலும்… உன்னை நான் மன்னிக்கிறேன். இந்த மன்னிப்பு உன்னுடைய நலனுக்காக இல்லை; எனக்காகவும் கருப்பினத்தவர்களுக்காகவும்” என்றுள்ளார் அழுத்தமாக.
இவரைப்போலவே மற்றொரு பாதிப்பாளரான பர்பரா மெஸ்ஸி (இவரது சகோதரி கேத்தரின் அத்தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்) பேசுகையில், “நீ எங்கள் நகரத்துக்கு வந்துவிட்டு, கருப்பினத்தவர்களை பிடிக்காதென சொல். கருப்பினத்தவர்களை பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது… நாங்கள் எல்லோரும் மனிதர்கள்! அதை உணர்” என்று உணர்வுபொங்க பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, அவரது மகன், குற்றவாளி பாய்டன் கெண்ட்ரானை தாக்க தொடங்கினார்.
இதைக்கண்ட பாப்ரா மெஸ்ஸி மகனை தடுத்தி நிறுத்திவிட்டு, “நான் என் சகோதரியின் இறப்பில் பட்ட வேதனைகளை கண்கூடாக கண்டதால் என் மகனால் தாங்கமுடியவில்லை. அதனால் இப்படி நடந்துக்கொண்டார். மே 14 அன்று, இந்த தீவிரவாதி `கருப்பினர்களின் வாழ்க்கை, தன் வாழ்க்கையில் ஒரு பொருட்டேயில்லை’ என்ற முடிவை எடுத்திருந்தான்… அப்படிப்பட்ட ஒருவனுக்கு இந்த நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் சரி, அது நிச்சயம் போதாது” என்றுள்ளார் அழுத்தமாக.
BREAKING: Someone in the courtroom lunged at #Buffalo mass shooter Payton Gendron during sentencing. He's been rushed out of the courtroom. Stay with @SPECNews1BUF for the latest. pic.twitter.com/937wKcUuYF
— Stephen Marth (@StephenMarth) February 15, 2023
இக்காட்சிகள் யாவும் நீதிமன்றத்தை உணர்வுகளால் நிரம்பச்செய்தது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.