Published : 15,Feb 2023 05:50 PM

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு எதிரான வழக்கு -உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Madras-High-Court-order-in-case-against-Tamil-Film-Producers-Council-Election

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரு துணைத் தலைவர்கள், இரு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், அறிவிப்புக்கு தடை விதித்து, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன், “செயற்குழுவில் விவாதிக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். இதனை ரத்து செய்து நடுநிலையான ஒருவரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

image

இதற்கு பதிலளித்த எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், “செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால் தேர்தல் அலுவலரை அணுகலாம். மேலும், தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனுவே காலாவதியாகிவிட்டது” என தெரிவித்தனர். இதனையடுத்து, கடந்த ஜனவரி 13-ம் தேதி நடைபெற்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவாகரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்