Published : 14,Feb 2023 09:54 AM
”மக்கள்தொகையை பெருக்க இப்படியொரு ஐடியாவா..” தாராள பிரபுக்களை உருவாக்கும் சீனா..!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவை இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா நெருங்கும் வேளை அத்தனை தொலைவில் இருக்கவில்லை. ஏனெனில் வரலாறு காணாத வகையில் சீனாவில் 2022ம் ஆண்டில் மட்டும் 8,50,000 ஆக மக்கள் தொகை பதிவாகியிருக்கிறது.
இது இந்தியாவோடு ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால் முதலிடத்தில் உள்ள சீனாவை முந்தும் நிலையிலேயே இந்தியா இருக்கிறது.
ஆகையால் சீனாவின் மக்கள்தொகையை பெருக்க அந்நாட்டு அரசு தம்பதிகளுக்கு கூடுதல் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தல்கள் பறந்தன. அதில் முதலில் ஒரு தம்பதி ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதியுண்டு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை கூடியதால் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்ட சீன அரசு தற்போது படிப்படியாக குழந்தை பெற்றுக்கொள்வதில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாத இளைஞர்கள் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளது சீனாவின் விந்தணு வங்கிகள். அதன்படி நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் கல்லூரி மாணவர்கள் விந்தணுக்களை தானம் செய்யக்கேட்டு சீனாவின் வீபோ என்ற சமூக வலைதளத்தில் யுன்னான் என்ற விந்தணு வங்கி பதிவிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளானது.
இவ்வாறு பெறப்படும் விந்தணுக்களை கொண்டு குழந்தைப்பேறு அடைய முடியாத தம்பதிக்கு செலுத்தி சீனாவின் மக்கள் தொகையை பெருக்குவதற்கான திட்டத்துக்கு இது உதவும் என்றும் சீன செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.