Published : 12,Feb 2023 10:14 PM

டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய சேஸிங்.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி!

T20-Women-s-World-Cup----India-defeated-Pakistan-

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

image

அதன்படி, பாகிஸ்தான் தொடக்க பேட்டர்களான முனிபா அலியும் ஜவேரியா கானும் விரைவிலேயே பெவிலியன் திரும்பியபோதும் கேப்டன் மரூப் மட்டும் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்களையும், தீப்தி சர்மா மற்றும் பூஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க பேட்டரான ஷபாலி வர்மா அதிரடியில் இறங்கினார். அவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுக்க, அவருக்கு ஆதரவாய் யாஸ்திகா பாட்டியாவும் தன் பங்குக்கு 20 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்தார். இடையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

image

அவர்கள் மூவரும் பெவிலியன் திரும்பினாலும், ஜெமிமாவும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஜெமிமா 38 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சாந்து 2 விக்கெட்களையும், இக்பால் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி அடுத்த போட்டியில் பிப்ரவரி 15ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸுடன் மோத இருக்கிறது.

டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்திய அணிக்கு இது மிகப்பெரிய சேஸிங். அதேபோல், சர்வதேச அளவிலும் ஒட்டுமொத்தமாக இது இரண்டாவது மிகப்பெரிய சேஸிங். 2009 உலகக்கோப்பையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 164 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றி. 

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்