Published : 12,Feb 2023 05:47 PM
துணிவு முதல்நாள் கொண்டாட்டத்தில் உயிரிழந்த பரத்தின் குடும்பத்திற்கு ரஜினி ரசிகர்கள் உதவி

துணிவு படம் பார்க்கச் சென்றபோது உயிரிழந்த இளைஞர் பரத்குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து உதவித்தொகை வழங்கியுள்ளனர் ரஜினி ரசிகர் மன்றத்தினர்.
கடந்த மாதம் கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் அருகில் ’துணிவு’ படம் பார்க்க சென்ற பரத்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினர். ரஜினி ரசிகர் மன்றம் விருகம்பாக்கம் பகுதி செயலாளர் ரமேஷ் கோவிந்தராஜ் தலைமையிலானோர் பரத்குமார் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றம் செயலாளர் ரமேஷ் கோவிந்தராஜ் விருகை செயலாளர் பேட்டியளிக்கையில், “ரசிகர் என்ற இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார்.
அந்த வகையில் ரசிகர் என்ற வகையில் நாங்கள் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அந்த குடும்பத்துக்கு உதவி செய்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்தே உதவவேண்டும் என்று நினைத்திருப்பார். அவர் சார்பில் ரசிகர்கள் நாங்கள் உதவி செய்துள்ளோம். அந்த குடும்பத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு தேவைப்பட்டால் அதற்கும் உதவி செய்வோம்” என்று பேசினார். பரத்குமார் குடும்பத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.