Published : 12,Feb 2023 11:36 AM
மாப்பிள்ளையுடன் ஓட்டம் பிடித்த பெண் குதிரை.. கல்யாண வரவேற்பில் நடந்த கலகலப்பு!

திருமண நிகழ்வுகளில் மட்டும் திட்டமிட்டபடி எல்லாமும் அதே மாதிரி நடப்பது என எதிர்பார்ப்பது சற்று ஏமாற்றத்தையே கொடுக்கும். குறிப்பாக மணமக்கள் விஷயத்தில் இதுபோன்று பல சம்பவங்கள் நடப்பது அவ்வப்போது சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிவருவதும் வாடிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில், திருமணம் நடைபெறும் இடத்துக்கு குதிரையில் வந்த மணமகனுக்கு நடந்த பரிதாபகரமான சம்பவம் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
அதன்படி பெண் குதிரை ஒன்றின் மீது உட்கார்ந்திருந்த மணமகனுக்கு உறவினர்கள் சார்பில் திருமண மண்டபம் வெளியே பட்டாசு வெடித்து அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திடீரென வெடி சத்தம் கேட்டதால் அரண்டுப்போன அந்த பெண் குதிரை அங்கிருந்து ஓட்டம்பிடித்திருக்கிறது.
குதிரையின் மீது மணமகனும் இருந்ததால் பதறிப்போன உறவினர்களும் அதன் பின்னாலேயே துரத்திப்பிடிக்க ஓடியிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோதான் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக மணமகனுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டுவிட்டது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட இணையவாசிகள், “ராஜா போருக்கு புறப்பட்டுவிட்டார்” என்றும், “மாப்பிள்ளைக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் இதுதான் நேரம் என தப்பிவிட்டார் போல” என்றும், “அந்த பெண் குதிரைக்கு மாப்பிள்ளை மேல் பிரியம் வந்துவிட்டது போல அதான் ஓட்டம் பிடித்திருக்கிறது” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.
கிண்டலாக பலரும் பதிவிட்டிருந்தாலும் அதே நேரத்தில் விலங்குகளிக்கு அதிக சத்தம் பிடிக்காது என தெரிந்தும் படிப்பறிவில்லாதவர்கள் போல நடந்துக்கொள்கிறார்கள் என்றும் கண்டனங்களை பதிவிட்டிருக்கிறார்கள்.