Published : 11,Feb 2023 02:16 PM
அது எப்படி ஒருத்தரால தூங்காம இருக்க முடியும்? - வியட்நாமின் தூங்காத மனிதரும் சுவாரஸ்யமும்!

தூங்குவதற்கு யாருக்குதான் பிடிக்காம் இருக்கும்? இரவு முழுவதும் தூங்கினாலும் காலை எழுவதற்கு முன்பு ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கிறேன் என கேட்காதவர்களே அரிதுதான். மேலும் ஒரு மனிதனின் தினசரி வேலைகளில் மிக முக்கியமாக இருப்பதும் தூக்கம்தான்.
6 முதல் 8 மணிநேரம் வரையில் தூங்காதவர்களின் உடல்நிலையும் மனநிலையும் சமநிலையில் இல்லாமலேயே இருக்கும். இதனாலேயே முறையாக தூங்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துவதுண்டு. ஆனால் 60 ஆண்டுகளாக ஒருவர் தூங்கமாலேயே தன்னுடைய வாழ்நாளை கழித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ட்ரூ பின்ஸ்கி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோதான் நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்தியிருக்கின்றன. அதன்படி வியட்நாமைச் சேர்ந்த Thai Ngoc என்ற 80 வயது முதியவர் 1962ம் ஆண்டிலிருந்தே ஒரு நாள் கூட தூங்கியதே இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1962ம் ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிறகு Thai ngoc தூங்குவதே இல்லையாம். இப்படியாக தூங்காமல் இருப்பதால் அவரை சூப்பர் ஹியூமன் என்று பலரும் அழைத்தாலும் Thai ngoc-க்கு தூங்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருக்கிறதாம். ஆனால் 1962ல் வந்த காய்ச்சல் தனது தூக்கத்தை முழுமையாக பறித்துவிட்டது என்று தாய் ngoc கூறியிருக்கிறார்.
அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் எவருமே இத்தனை ஆண்டுகளில் ஒருநாள் கூட Thai ngoc தூங்கி பார்த்ததில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனையும் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் எவருமே அதனை நம்பவில்லையாம்.
80 வயதாகியும் தூங்காமல் இருப்பதால் இது இன்சோம்னியா என்ற தூக்கம் வராத வியாதியாக இருக்கும் என சந்தேகித்தாலும் insomnia-ஆல் வரும் எந்த உடல் மற்றும் மனநல பாதிப்பும் Thai ngoc-க்கு இருக்கவில்லை என்று மருத்துவர்களே கூறியிருக்கிறார்கள். நல்ல உணவுமுறைகளை பின்பற்றி பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம் Thai ngoc.
க்ரீன் டீயையும், மது குடிப்பதையும் விரும்பும் Thai ngoc-க்கு தூங்க முடியாமல் இருப்பது பெரும் வெறுமையையே கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். Thai ngoc-ன் இந்த வீடியோவானது 36 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. “பூமியில் வாழ்பவர்களிலேயே அதிகளவு நேரத்தைக்கொண்ட மனிதராக இவரே இருப்பார்” என்றும், “தூங்காமலேயே அவர் நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார் என்பதை அறிவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.