Published : 10,Feb 2023 09:16 PM
"இன்னும் ஒருபடி வலிமையாக..." ரிஷப் பண்ட்டின் நம்பிக்கை பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

விபத்தில் சிக்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், தன் உடல்நிலை குறித்து நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய தகுதியாகிவிட்டார் என்றும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டில் இருந்தே காயம் ஆறும் வரையில் ஓய்வெடுப்பார் எனவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டிருந்த ரிஷப் பண்ட், "வெளியே உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்'' எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் ஊன்றுகோல் உதவியுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு, ”ஒருபடி முன்னே... ஒருபடி வலிமையாக... ஒருபடி மேன்மையாக” எனப் பதிவிட்டுள்ளார் ரிஷப். அவருடைய பதிவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் ரசிகர்கள், விரைவில் அவர் குணமடைய வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
One step forward
— Rishabh Pant (@RishabhPant17) February 10, 2023
One step stronger
One step better pic.twitter.com/uMiIfd7ap5
கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 30ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே சென்றபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த ரிஷ்ப் பண்ட்டை, அந்த வழியாகச் சென்ற பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டேராடூன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த அவர், மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். மும்பையில் அவரது முழங்கால் மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவுக்கு இரண்டு அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் அதிலிருந்து அவர் மீண்டு வருகிறார். இந்த விபத்து காரணமாக, இந்த ஆண்டு நடைபெறும் பல போட்டிகளில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என டெல்லி அணி நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அவர் டெல்லி அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ”ரிஷப் பண்ட்டின் சேவை, அணிக்குத் தேவை. ஆகையால், பயிற்சி முகாமில் என் அருகில் இருந்தால் போதும்” என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.