Published : 09,Feb 2023 06:07 PM

INDvsAUS: முதல் நாள் போட்டியில் சொதப்பிய கே.எல்.ராகுல்... நங்கூரமாய் நின்ற ரோகித் சர்மா!

The-first-day-of-the-match-has-come-to-an-end

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இப்போட்டி தொடர், இரு அணிகளுக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட முடியும் என்பதால், இந்தியா மீதே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம், இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.

image

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் தொடக்கப் பேட்டர்களான டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆகிய இருவரையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ், ஷமி ஆகியோர் முதல் 3 ஓவரிலேயே வெளியேற்றினர். பின்னர் வந்த ஆஸ்திரேலிய வீரர்களை இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திர அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் போட்டிபோட்டு சுழல் தாக்குதல் நடத்தி பெவிலியன் திரும்ப வைத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.7 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 49 ரன்களும், சுமித் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் எடுத்தனர். சிராஜ் மற்றும் ஷமி ஆகிய இருவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 3 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், இந்தப் போட்டியில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

image

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடுவதற்கு இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும், துணை கேப்டனும் புது மாப்பிளையுமான கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில், வழக்கம்போல் ரோகித் அதிரடி ஆட்டம் ஆட, ராகுலோ சொதப்ப ஆரம்பித்தார். இறுதியில் அவர் 71 பந்துகளைச் சந்தித்து 20 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், டாட் முர்பி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், மறுபுறம் நாக்பூர் மைதானத்தில் நங்கூரமாய் நின்ற ரோகித் சர்மா, அரைசதம் அடித்தார்.

24 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தபோது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது, ரோகித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்களுடனும் அஸ்வின் 5 பந்துகளைச் சந்தித்து ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை தொடரும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்