Published : 09,Feb 2023 01:08 PM
போலீசாரை தாக்கியவரின் கால் முறிந்தது - தப்பிக்க முயன்றபோது தவறிவிழுந்ததாக தகவல்

பரங்கிமலை ரயில் நிலையம் அருகே போலீசாரை தாக்கியவர், விசாரணையின் போது தப்பிக்க முயற்சி செய்ததாகவும். அப்போது அவரின் கால் முறிந்தது. இச்சம்பவத்தில், 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்தவர் விஜயன் (வயது 32). இவர் புதுப்பேட்டை ஆயுதப் படையில் 2-ம் நிலை காவலராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 6-ஆம் தேதி இரவு தனது மைத்துனர் வாசு என்பவருடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டு ஆலந்தூர் வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, வாசுவின் நண்பர் அஜ்மல் செல்போன் மூலம் அழைத்து பழவந்தாங்கல் ரெயில் நிலையம் அருகே கண்ணன் காலனி ரெயில்வே நடைபாதையில் அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொண்டு இருப்பதாக கூறினார். உடனே, வாசு தனது மாமா விஜயனை அழைத்து கொண்டு சென்றார். அங்கு சென்று பார்த்தபோது அஜ்மல் மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து உள்பட 5 பேரை கண்ணன் காலனிப் பகுதியைச் சேர்ந்த 5 பேர் தாக்கியது தெரிந்தது. அஜ்மல் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தியது தொடர்பான சர்ச்சையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்றிருந்த போலீஸ்காரர் விஜயன் ஏன் அடித்தீர்கள் என கேட்டு உள்ளார். உடனே அந்த 5 பேரும் அங்கிருந்த கற்களை கொண்டு விஜயனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஒடிவிட்டனர்.
இதில் ஆயுதப்படை போலீஸ்காரர் விஜயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸ்காரர் விஜயனை தாக்கி விட்டு தலைமறைவான கண்ணன் காலனியை சேர்ந்த அஜீத்குமார்(வ 23), வினோத்குமார்(வ 25), ரவிக்குமார்(வ 25), விவேக்(வ 26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, அஜீத் குமார் என்பவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துவிட்டதாகவும், இதில் அவரது கால் முறிந்துவிட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆழி என்ற மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.