சுழற்பந்தால் ஆஸ்திரேலியாவை சுருட்டுவாரா அஸ்வின்? - எகிறும் எதிர்பார்ப்பு

சுழற்பந்தால் ஆஸ்திரேலியாவை சுருட்டுவாரா அஸ்வின்? - எகிறும் எதிர்பார்ப்பு
சுழற்பந்தால் ஆஸ்திரேலியாவை சுருட்டுவாரா அஸ்வின்? - எகிறும் எதிர்பார்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக கருதப்படுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல்போட்டி நாக்பூரில் நடைபெற உள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல் ராகுல் துணை கேப்டனாக செயல்படுவார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அஷ்வின் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ரிஷப் பந்த் அறுவைசிகிச்சைக்கு பின் ஓய்வில் இருப்பதால் அணியில் இடம்பெறவில்லை.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக உள்ளார். லபுஷான், நாதன்லியான், மிட்சல் ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இத்தொடரை வெல்ல ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது ஆஷஸ் தொடரை வெல்வதை விட பெரியது என டேவிட் வார்னரும் ஸ்டீவன் ஸ்மித்தும் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இத்தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதற்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப போட்டிக்கு தகுதிபெற இத்தொடரில் இந்தியா 3- 1 என்ற ஆட்டக் கணக்கிலோ அல்லது அதைவிட சிறப்பாகவோ வெல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றும் வேகத்தில் இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கோப்பையை வெல்லும் அவர்கள் இலக்கில் முக்கிய தடைக்கல்லாக இருப்பவர் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். தரமான சுழற்பந்தில் தடுமாறுபவர்களான ஆஸ்திரேலியர்கள், அஷ்வினை ஒரு ஆபத்தாக பார்க்கின்றனர். இதற்காக அஷ்வினை போன்றே பந்துவீசும் மகேஷ் பித்தியா என்பவரை தேடிக்கண்டுபிடித்து அவரை பந்துவீச வைத்து பயிற்சி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

அஷ்வின் தரமான பந்துவீச்சாளராக இருந்தாலும் அவரை சமாளிக்க தாங்கள் தயாராகியுள்ளதாக கூறுகிறார் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். அஷ்வின் எப்படி பந்துவீச போகிறார் என்பதை பொறுத்தே தொடரின் முடிவு அமையும் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இத்தொடரில் இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தால் டெஸ்ட் உலகில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 3 ஆவது வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெறுவார்.

இச்சாதனையை ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் மற்றும் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவர் மட்டுமே கைவசம் வைத்துள்ளனர். சுழல் சூறாவளியை ஆஸ்திரேலியர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது இத்தொடருக்கான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com