Published : 08,Feb 2023 02:01 PM
`என் வீட்டின் முன் வேறொருத்தர் கார்-ஐ நிறுத்துவதா?’- வீட்டு உரிமையாளரின் செயலால் அதிர்ச்சி

தன் வீட்டின் முன் மற்றொருவர் காரை நிறுத்தியதால், ஆவேசம் கொண்டு அந்த காரை உடைத்துள்ளார் வீட்டு உரிமையாளாரொருவர். இதைத்தொடர்ந்து கார் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிந்து (37). இவரது மகள் கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சிந்து காரில் சென்று, கே.கே நகர் 4வது செக்டர் 20வது தெருவில் காரை நிறுத்திவிட்டு மகளை அழைக்க பள்ளிக்குள் சென்றுள்ளார்.

பின்னர் மகளை அழைத்துக்கொண்டு காரை எடுக்க வந்த போது, கார் விடப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அரவிந்த் (40) என்பவர், சிந்துவின் காரின் முன்பக்க கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து சிந்து, இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.
அரவிந்த், “காரை ஏன் என் வீட்டு வாசலில் நிறுத்தினீர்கள்” என கேட்டு, சிந்துவை தகாத வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், சிந்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கே.கே நகர் காவல் நிலைய காவலர் விஜயராஜ், இது குறித்து கேட்டப்போது மீண்டும் அந்த நபர் காவலரை ஆபாசமாக பேசி கட்டையால் தாக்கி, கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் கண்ணாடியை உடைத்தது மற்றும் போலீசாரை தாக்கியது ஆகிய குற்றங்களுக்காக அரவிந்த் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கெனவே முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.