Published : 07,Feb 2023 09:07 PM
அடுக்கடுக்கான புகார்கள்.. கந்துவட்டிக்காரர் வீட்டில் அதிரடி ரெய்டு.. இடுக்கியில் பரபரப்பு

இடுக்கியில் கந்து வட்டிக்காரர் வீட்டிற்குள் புகுந்து போலீஸார் நடத்திய அதிரடி ரெய்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி அருகே தொடுபுழாவில் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்து வட்டிக்காரர் வீட்டிற்குள் புகுந்து போலீஸார் அதிரடி "ரெய்டு'" நடத்தினர். அப்பாவி பொதுமக்கள் அடமானம் வைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அசத்தியுள்ளனர்.
அவசரத்திற்கு பணம் தேவையாகும் போது அப்பாவி பொதுமக்கள் எத்தனை சதவீத வட்டி என்றாலும், எதை வேண்டுமானாலும் அடமானம் வைக்க தயாராகி விடுகிறார்கள். அந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளும் கந்து வட்டிக்காரர்கள், எப்படி எல்லாம்? எந்த வழிகளில் எல்லாம் முடியுமோ? இயலாதவர்களிடம்
பணம் ஈட்டிக் கொள்கிறார்கள். வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி தராதவர்களிடம் அதற்கு ஈடாக விலை மதிக்க முடியாத பொருட்களை அபகரித்துக் கொள்ளும் கொடுமையும் தொடர்கிறது. அரசுகள் முயன்றும் கந்துவட்டி குரூரத்தை தடுக்க முடியவில்லை. மாறாக கந்துவட்டிக்காரர்களின் வளர்ச்சி தான் காலகாலமாக மேலோங்கி நிற்கிறது.
இந்நிலையில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் கந்துவட்டிக்காரரின் வீட்டுக்குள்ளேயே புகுந்து அதிரடி "ரெய்டு" நடத்தி அசத்தியுள்ளனர் போலீசார். கேரள மாநிலம் இடுக்கி அருகே தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் அகஸ்டின். இவர் மாவட்டம் முழுவதும் உள்ள பலருக்கும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அதிகப்படியான வட்டி என்பதால் அவரிடம் வட்டிக்கு வாங்கியவர் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். பணத்தை உரிய நேரத்தில் தரவில்லை என்றால் வீடு புகுந்து மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். வீடு புகுந்து மிரட்டியும் பணம் கிடைக்கவில்லை என்றால் பணத்திற்கு ஈடான பொருள்களையும், காசோலைகளை, வாகனங்களை அபகரித்து செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தொடுபுழா போலீசாருக்கு புகார்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், கந்துவட்டிக்காரரான ஜோசப் அகஸ்டினின் வீட்டிற்குள் திடீரென புகுந்து அதிரடி "ரெய்டில்" ஈடுபட்டனர். சோதனையின் போது கோடிக்கணக்கான ரூபாய் பலருக்கு கந்து வட்டிக்கு கொடுத்ததற்கான ஆவணங்கள் தனிப்படை போலீசாரிடம் சிக்கின. அதோடு, கந்து வட்டிக்கு கொடுத்த பணத்திற்கு ஈடாக அடமானம் வைத்த வாகனங்களின் அசல் ஆர்சி புத்தகங்கள், கையெழுத்திட்ட முத்திரை பத்திரங்கள பணம் செலுத்த முடியாதவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஐந்து இருசக்கர வாகனங்கள், நான்கு கார்கள், பல வாகனங்களின் சாவிகள், கையெழுத்திட்ட வெற்று காசோலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த பல ஆண்டுகளாக ஜோசப் அகஸ்டின், தனது சகோதரர் மற்றும் உறவினரோடு இணைந்து கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும் சகோதரர் மற்றும் உறவினர் வீடுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கந்துவட்டிக்காரர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
வெளியூர் சென்றிருந்த ஜோசப் அகஸ்டின் மற்றும் அவரது சகோதரர் போலீசாரின் ரெய்டு குறித்து தகவல் அறிந்ததும் தலைமறைவாகியுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடுக்கி போலீசார் கந்து வட்டிக்காரரின் வீட்டுக்குள் புகுந்து ஆவணங்களை அள்ளிச் சென்றது, கந்துவட்டி ஒழிப்பிற்கு முன்னுதாரணமாக பார்க்கப்படுவதோடு, அனைத்து தரப்பினரிடையே பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டுள்ளது.