Published : 07,Feb 2023 07:23 PM
”புஜாராலாம் வேணாம் சூர்யகுமாரை எடுங்க”-முன்னாள் செலக்டரின் ட்வீட்டால் கடுப்பான நெட்டிசன்ஸ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில், புஜாராவிற்கு பதிலாக சூர்ய குமார் யாதவை அணியில் எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த சுனில் ஜோஷி ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, முன்னாள் வீரர்கள், இரு நாட்டு அணி வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் தொடரை வெற்றிப்பெற வைத்து சூப்பர்ஸ் ஸ்டார்ஸ் பிளேயர்களாக விளங்கிய பெரும் வீரர்கள் தற்போதைய பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதில் முக்கியமான வீரர்களாக அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ஹனுமா விகாரி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்துல் தாக்கூர் என பலவீரர்கள் அணியில் இல்லாமல் இருக்கின்றனர்.
ரிஷப் பண்ட் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இல்லாமல் இருப்பது, இந்திய அணிக்கு பெரிய பாதகமாகவே பார்க்கப்படுகிறது. முன்னர் ரிஷப் பண்ட் குறித்து பேசியிருந்த முன்னாள் இந்திய பயிற்சியாளராக இருந்த இயான் சேப்பல் கூட, இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் தான் என்றாலும், ரிஷப் பண்டின் இல்லாததை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது என்ற ஒரு பெரிய கேள்வியை வைத்திருந்தார். ரிஷப் பண்ட் போன்ற வீரர் அணியில் இல்லாததாலும், அவருக்கு மாற்றுவீரராக பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தில் அவதியடைந்து வரும் நிலையில், அவரும் பங்கேற்பாரா என்ற கவலை இந்திய அணியில் பெரிய கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் தொடக்கத்திலேயே டாப் ஆடர் பேட்டர்கள் அவுட்டாகி வெளியேறினாலும், எதிரணியினரின் கைகளில் இருந்து ரன்களை சிறந்த ரன்ரேட்டில் எடுத்துவரும் தனித்திறமை ரிஷப் பண்டிடம் மட்டுமே இந்திய அணியில் இருக்கிறது. அதை அவர் பல போட்டிகளில் கண்முன்னே செய்தும் காட்டியுள்ளார். ரிஷப் பண்ட் இல்லாதது இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையை பலவீனமானதாகவே காட்டுகிறது. இதனால் போட்டியில் கடைசிவரை நின்று விளையாடவேண்டிய பொறுப்பும், அழுத்தமும் அணியின் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் விராட் கோலியின் கைகளில் தான் அதிகமாக இருக்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா எந்த 11 வீரர்களோடு விளையாடும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தங்களுடைய ஆடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி தான் முன்னாள் இந்திய அணியின் தேர்வாளராக இருந்த சுனில் ஜோஷியும் அவருக்கான இந்திய அணியை அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், ” இந்திய அணி இந்த வரிசையில் களம் இறங்க வேண்டும். புஜாராவா இல்லை சூர்யகுமாரா என ஆராய்ந்து களமிறக்க வேண்டும். குல்தீப் மற்றும் அக்சர் பட்டேலுக்கிடையே பலத்த போட்டி இருக்கிறது. இதோ என்னுடைய ஆடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி” என்று தெரிவித்துள்ளார்.
அந்த அணியில் ரோகித் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் ( புஜாராவை விட முதலில் சூர்யாவை தான் கருத்தில் கொள்ள வேண்டும்), விராட் கோலி, கே எல் ராகுல், கே எஸ் பரத், ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் என அவருடைய அணியை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் புஜாராவை விட்டுவிட்டு சூர்யகுமார் யாதவை சலெக்ட் செய்திருக்கும் பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரு ஜாம்பவான் வீரருக்கு பதிலாக, ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரரா என டிரோல் செய்துவருகின்றனர்.
Will India line up like this in the first test? Deliberation between Pujara & Surya,a tough draw between both lefties Kuldeep &Axar. Here’s my XI:
— Sunil Joshi | (@SunilJoshi_Spin) February 7, 2023
R Sharma
Shubhman Gill
Surya (should get first look in )
V Kohli
KL Rahul
KS Bharat
R Ashwin
R Jadeja
Kuldeep Y
M Shami
M Siraj
சுனில் ஜோஷியின் அந்த பதிவை பகிர்ந்திருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான தோட்டா கணேஷ்., ” புஜாராவை விட சூர்யகுமாரை டெஸ்ட் போட்டிக்கு முதலாவதாக தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் தேர்வாளர் ஒருவர் விரும்புகிறார். இந்த முடிவு மூழ்கி போகட்டும். புஜாராவை விட இன்னும் ஒரு டெஸ்ட் கூட விளையாடாத ஒருவரை களமிறக்க வேண்டும் என கூறும் துணிச்சல் என் மனதை உலுக்குகிறது. பாவம் புஜாரா தனது வாழ்நாள் முழுவதும் பலிகடாவாகவே இருந்துவருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
One of the ex selectors wants Surya to be chosen ahead of Pujara for tests. Let that sink in. I mean, the audacity to even think that one can replace Pujara with someone who’s yet to play a test, boggles my mind. No wonder poor Pujara has been a scapegoat all his life #BGT2023
— Dodda Ganesh | (@doddaganesha) February 7, 2023
மேலும் கருத்து தெரிவித்துள்ள ஒரு ரசிகர், “ நல்லவேளை நீங்கள் இந்திய அணியின் சலெக்டராக இப்போது இல்லை” என்று கூறியுள்ளார்.
Ha ha ha No Pujara, thank God you are not selecting the team!
— S A (@infocric) February 7, 2023
மற்றொருவர், “ புஜாரா பெயர் தான் அணிக்கான பெயர் பட்டியலிலே முதலில் இருக்கும் சார், சூர்யகுமார் யாதவ் காத்திருக்க தான் வேண்டும், அவருக்கு முன்னதாக சர்பராஸ் கான் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
Pujara should be one of first name on team sheet sir. Surya should wait, ideally should be Sarfaraj Khan.
— Kapil Gulechha (@kgulechha) February 7, 2023
மேலும் ஒருவர், “ இதனால் தான் உங்களை அணித்தேர்வில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள், லொல்” எனவும், மற்றொருவர், “ இந்தியாவின் இந்தகால தடுப்புசுவர் வீரராக இருக்கும் ஒருவர் இல்லாமல் எப்படி நீங்கள் அணியை எடுப்பீர்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Lol.. there was a reason you were kicked of the selection panel
— Shankar Kumara ☄ (@skumara003d) February 7, 2023