இன்னும் எத்தனை உயிர்களோ! ஆன்லைன் ரம்மியால் படிப்பை இழந்த விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

இன்னும் எத்தனை உயிர்களோ! ஆன்லைன் ரம்மியால் படிப்பை இழந்த விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு
இன்னும் எத்தனை உயிர்களோ! ஆன்லைன் ரம்மியால் படிப்பை இழந்த விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

மதுரையில் ஆன்லைன் ரம்மியால் கல்லூரி படிப்பையே பாதியில் விட்டு வேலைக்கு சேர்ந்த இளைஞர் பண இழப்பால் உயிரிழந்த அவலம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் முள்ளாகாடு தமணன்சாலை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி - முத்துராமன் தம்பதியினருக்கு 3 மகன்கள். கடந்த 16 வருடங்களுக்கு முன்பு தாய் மகாலட்சுமி உயிரிழந்த நிலையில் தந்தை முத்துராமன் வேறொரு திருமணம் செய்து தனியாக வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் தம்பதியினரின் பிள்ளைகளான குணசீலன்(26), பசுபதி(25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசி பராமரிப்பில் வளர்ந்துவந்துள்ளனர். குணசீலன் கல்லூரியில் பட்டபடிப்பு 3ஆவது ஆண்டு படித்துவந்தார். அப்போது, செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கிய அவர், தொடர்ந்து பண மோகத்தால் அதிகமாக விளையாட ஆரம்பித்துள்ளார். இதனால் கல்லூரிக்கு கட்டும் பணத்தையும் ஆன்லைன் ரம்மி மூலமாக இழந்துள்ளார்.

இதனையடுத்து தம்பி பசுபதி, அண்ணன் குணசீலனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க கொடுத்துவிட்டு, மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நியூ மாஸ் என்ற உணவகத்தில் பணிபுரிவதற்காக அழைத்துசென்று வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த குணசீலன், கடைசி செமஸ்டர் முடிக்காமலயே ஓட்டலில் வேலை பார்க்க வந்து, கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்துவந்துள்ளார்.

அப்போதும் அவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கத்தை விடாமல், சம்பாதித்த பணத்தையும் கட்டி விளையாடி இழந்துவந்துள்ளார். மேலும் பல்வேறு நபர்களிடம் கடனை வாங்கி, அதன் மூலமாகவும் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்துள்ளார். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகளவிற்கான பணத்தை இழந்துவிட்டதாக, தனது சக பணியாளர்களிடம் தெரிவித்துவிட்டு மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகர் தாசில்தார் 1ஆவது தெரு சாத்தமங்கலம் பகுதியில் தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை திடிரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தம்பி பசுபதி அண்ணனை நேரில் பார்க்கச்சென்று பார்த்தபோது, உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

சமபவம் குறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர், உடலை மீட்டு் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com