
சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழா சிறிய அளவில் நடத்தப்படுவது அவருக்கு செய்யப்படும் அவமரியாதை என்றும், மணிமண்டப திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசனின் குடும்பத்தினரும், அவரது ரசிகர்களும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாக இருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் உயிருடன் இருந்திருந்தால் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டு நடிகர் திலகத்தின் ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தி இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை தமிழக அரசு திறக்க இருப்பது மகிழ்ச்சியளித்தாலும், அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ கலந்துகொள்ளப் போவதில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்திற்கும், பெருமை மிகுந்த தமிழ்மொழிக்கும், பெரும் சேவையாற்றியிருப்பதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தந்தையின் மணிமண்டப திறப்பு விழா சிறிய அளவில் நடத்தப்படுவது அவருக்கு செய்யப்படும் அவமரியதையாகவே தோன்றுவதாகவும் கடிதத்தில் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் மற்ற அரசு பிரதிநிதிகளையும் மணிமண்டப திறப்பு விழாவிற்கு அழைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரபு மற்றும் குடும்பத்தினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.