Published : 05,Feb 2023 01:27 PM

‘எனது இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது’ - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Director-and-Actor-T-P-Gajendran-passed-away-Tamil-Nadu-Chief-Minister-M-K-Stalin-Condolence

பிரபல இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரி காலத் தோழருமான டி.பி. கஜேந்திரன் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் விசுவின் உதவி இயக்குநராக பணியாற்றிய டி.பி. கஜேந்திரன், பின்னர் ‘வீடு மனைவி மக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘பாட்டு வாத்தியார்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பாசமுள்ள பாண்டியரே’ உள்பட 27 படங்களை இயக்கினார் டி.பி. கஜேந்திரன்.

மேலும், ‘புதிய சகாப்தம்’, ‘பிரியமுடன்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘பேரழகன்’, ‘சந்திரமுகி’, ‘மஜா’, ‘வில்லு’, ‘மகனே என் மருமகனே’ உள்பட முன்னணி நடிகர்களின் பல படங்களிலும் நடித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, நேற்று முன் தினம் தான் வீடு திரும்பிய நிலையில், டி.பி. கஜேந்திரன் இன்று காலை 7 மணிக்கு காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.பி கஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று, அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் இரங்கல் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், “பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், டி.பி.கஜேந்திரனும் கல்லூரி நண்பர்கள். சென்னை மாநிலக் கல்லூரியில் இருவரும் படித்துள்ளார்கள். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தான் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டி.பி. கஜேந்திரன் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்