Published : 04,Feb 2023 10:10 PM

"மல்லிகை என் மன்னன் மயங்கும்.." - மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு பிரபலங்கள் புகழஞ்சலி!

Vani-Jayaram-Celebrity-Praise

மறைந்த பின்னணி பாடகர் வாணி ஜெயராமின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) நுங்கம்பாக்கம் இல்லத்தில் கடந்த பல ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் கடந்த 5 வருடங்களாக வீட்டு வேலை செய்து வரும் மலர்க்கொடி என்பவர், வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், வாணி ஜெயராம் அவர்களின் தங்கை உமா என்பவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர் ஆழ்வார்பேட்டையில் இருந்து வீட்டு சாவியை எடுத்து வந்துள்ளார்.

image

இதனிடையே அபார்ட்மெண்ட் அசோசியன் மூலமாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கை உமா உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது வாணி ஜெயராம் வீட்டினுள் நெற்றியில் அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து ஆயிரம் விளக்கு சட்ட ஒழுங்கு ஆய்வாளர் மோகன் தாஸ் தலைமையிலான காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து வாணி ஜெயராம் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தன் மனைவியுடன் வாணி இல்லத்திற்கு வந்தார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் ஆகியோரும் அவரது உடல் இல்லம் வந்து சேரும் முன் வந்துவிட்டு புறப்பட்டனர்.

image

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன்:

அற்புதமான கலைஞர். கலைவாணி பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான ஒன்று. வாணி ஜெயராம் மற்றும் எஸ்பிபி இவர்களோடு ரெக்கார்டிங் போகும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். உலக அளவில் புகழ் கொண்டவர் வாணி ஜெயராமன். அவரது இழப்பு மிகவும் கவலை அடையச் செய்கிறது. எங்களுடைய குடும்பத்தினருக்கு அவர் மிகவும் நெருக்கமானவர். அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்ட்டது எங்களுக்கு மகிழ்ச்சி.

புகழையும் பணத்தையும் இவர் தேடி செல்லவில்லை. அனைத்தும் வாணி ஜெயராமை தேடி வந்தது. இவருடைய இறப்பு என்னுடைய மூத்த சகோதரி இழப்பு போன்ற ஒன்று. பத்மபூஷன் விருது பெற்றதற்கு இந்த வாரம் இவரை அழைத்து பாராட்டு மற்றும் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்படி ஒரு சூழல் ஏற்பட்டிருப்பது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இழப்பு இசை துறைக்கு பெரும் இழப்பு என தெரிவித்தார்.

image

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்:

வாணி ஜெயராமினின் இழப்பு ரசிக பெருமக்களுக்கு பெரும் இழப்பு. சிறந்த பாடகி எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார். நல்ல குரல் வளமும், முகம் லட்சணமும் கொண்டவர் வாணி ஜெயராம். அவருக்கு பக்க பின்புலமாக இருந்தவர் அவருடைய கணவர்.

மத்திய அரசு தற்போது தான் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது உடல் சாந்தி அடைய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

image

மாநில பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன்:

நேற்றைக்கு முன்தினம் எங்களுடைய அகில இந்திய பாரத பொதுச் செயலாளர் வினோத் கௌடயா அவர்கள் பல்வேறு கட்சி நிகழ்ச்சிக்காகவும் மக்கள் நல திட்டங்களை தொடங்குவதற்காகவும் சென்னை வந்திருந்தார். அப்போது வாணி ஜெயராம் அவர்களை வீட்டில் சென்று சந்திக்க வேண்டும் என எங்களுடைய மாவட்ட செயலாளர் கூறினார்கள். உடனே நேரில் வந்து சந்தித்து சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துச் சொல்லி ஒருநாள் கூட ஆகவில்லை அவர் நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார் வாணி ஜெயராமன் அவர் மறைந்தாலும் அவர்களுடைய புகழ் மறையாத அளவிற்கு பாடலை தமிழ் மக்கள் அனைவரும் கேட்கும் படி செய்துள்ளர். இந்த ஆண்டு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருது வழங்கியுள்ளது என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்