
சசிகலாவின் பதவியேற்பை ஆளுநர் தாமதப்படுத்துவதாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் தலைமைக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எதிரிகளின் சதி செய்கிறார்கள்; அவர்களுக்கு நாம் யாரென்று காட்ட வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சசிகலா பேசினார். இந்த நிலையில், சசிகலா பதவியேற்பை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதப்படுவதாகவும், உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உத்தரவிடக் கோரியும் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்த அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடைய பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க யாரும் நேரம் கேட்கவில்லை என்று குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.