’சும்மா ஓட்டிப் பாக்குறேன்’ - அலேக்காக பைக்கை எடுத்துச்சென்ற "OLX" திருடன்!

’சும்மா ஓட்டிப் பாக்குறேன்’ - அலேக்காக பைக்கை எடுத்துச்சென்ற "OLX" திருடன்!
’சும்மா ஓட்டிப் பாக்குறேன்’ - அலேக்காக பைக்கை எடுத்துச்சென்ற "OLX" திருடன்!

பல்லடம் அருகே ஆன்லைன் செயலிமூலம் வாகனத்தை விற்க முயன்ற நபரிடம் வாகனத்தை வாங்குவது போல் நடித்து திருடிச்சென்ற நூதன கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(28). இவர் அதே பகுதியில் பஞ்சர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான பல்சர் என்.எஸ் 200 என்ற பைக்கை விற்பனை செய்வதற்கு ஆன்லைன் செயலியான ஓஎல்எக்ஸ் செயலியில் தனது வாகனத்தின் படங்கள் மற்றும் விவரங்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அந்த வாகனத்தின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை பார்த்த நபர் ஒருவர், தான் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும், நேரில் வந்து பார்த்து உங்கள் வண்டியை விலைக்கு வாங்கி கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அருண்குமார் அந்த நபரின் பேச்சை நம்பி பல்லடத்துக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அருண்குமாரின் பஞ்சர் கடை முன்பாக வைத்திருந்த பல்சர் வாகனத்தை ஓஎல்எக்ஸ் ஆசாமி முன்னும் பின்னும் இயக்கி பார்த்து உள்ளார். பிறகு வண்டியை சோதனை செய்ய சிறிது தூரம் வாகனத்தை எடுத்துச் சென்ற அந்த நபர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அருண்குமார் தன் நண்பர் சிலருடன் பைக்கை திருடிவிட்டு தப்பி ஓடிய நபரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தொலைந்த வாகனத்தின் சான்றுகளுடன் பல்லடம் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் மர்ம நபர் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகளை அங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தவற்றை வெளியிட்டு பைக் திருடனை வலை வீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்துள்ள நிலையில் பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com